‘இது நம்ம லிஸ்ட்லேயே இல்லேயே’... ‘அதிர வைத்த அபராதம்’... ‘மிரண்டுப் போன லாரி டிரைவர்’!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Sep 09, 2019 09:28 AM

புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின் படி அபராதங்கள் உயர்த்தப்பட்ட நிலையில், லாரி ஓட்டுநர் ஒருவருக்கு, விதிக்கப்பட்ட அபராதத் தொகையே, தற்போது வரை நாட்டில் செலுத்தப்பட்டுள்ள, அதிகபட்ச அபராதத் தொகையாக கருதப்படுகிறது.

Rs 86,500 challan issued to truck driver in Odisha

நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல், புதிய மோட்டார் வாகனச் சட்டம் அமலுக்கு வந்தது. இதன்படி, போக்குவரத்து விதிமீறல்களுக்கு விதிக்கப்படும், அபராதம் மிக அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆங்காங்கே அதிக அபராதத் தொகையால், பல்வேறு சுவாரஸ்ய நிகழ்வுகளும் நடந்த வண்ணம் உள்ளன. சில நாட்களுக்கு முன்னர், ஒடிசாவில் லைசன்ஸ் இல்லாமல், குடிபோதையில் ஆட்டோ ஓட்டியவருக்கு ரூ.47,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதிர்ச்சி தரும் செய்தி என்னவென்றால், அந்த ஆட்டோவை அவர், ரூ.25 ஆயிரத்துக்குதான் வாங்கியிருந்தார்.

டெல்லியில் 11 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதால், குடிபோதையில் தனது பைக்கை தீயிட்டு கொளுத்தினார் இளைஞர் ஒருவர். இதில் ஹரியானா, ஒடிசா ஆகிய இரு மாநிலங்கள்தான் இதுவரை அதிக அபராதம் விதித்துள்ளது. இந்நிலையில், ஒடிசாவில் அதிக அபராதம் செலுத்தியவர் என்ற சாதனையை, லாரி ஓட்டுநர் ஒருவர் படைத்துள்ளார். கடந்த 3-ம் தேதி நிகழ்ந்த இந்தச் சம்பவம், அபராதம் வழங்கப்பட்ட ரசீது சமூகவலைதளங்களில் தற்போதுதான் வைரலாக பரவி வருகிறது. அஷோக் ஜாதவ் என்ற அந்த லாரி ஓட்டுநருக்கு, சம்பல்பூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர், ரூ.86,500 அபராதம் விதித்துள்ளார்.

லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியது, அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் எடையில் சரக்கு ஏற்றுதல், பொது விதிமீறல் உள்ளிட்ட குற்றங்களுக்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பி.எல்.ஏ என்ற நிறுவனத்துக்கு சொந்தமான அந்த லாரி, ஜே.சி.பி இயந்திரத்தை எடுத்துச் சென்றுள்ளது. சுமார் 5 மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பின்னர், ரூ.70 ஆயிரத்தை ஓட்டுநர் செலுத்தியுள்ளார். மீதமுள்ள தொகையை செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை, புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் அஷோக் ஜாதவ் செலுத்தியுள்ளதே அதிக அபராதம் என்று தெரியவந்துள்ளது.

Tags : #FINE #ODISHA #MOTOR #VEHICLE #ACT