'கொரோனா வார்டுல வேல' ... 'அதுனால தான் என் குழந்தைக்கு' ... செவிலியரின் நெகிழ்ச்சி கதை!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதுமுள்ள அனைத்து நாடுகளையும் கடுமையாக பாதித்துள்ளது. வைரசை கட்டுப்படுத்த அனைத்து நாட்டிலுமுள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் இரவு பகலாக தங்களது உயிரை பெரிதாக மதிக்காமல் அயராது உழைத்து வருகின்றனர்.

இந்நிலையில் கேரள மாநிலம், கொச்சி மாவட்டத்தின் கலமசேரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணியாற்றி வரும் ரீஜாஜா விஷ்ணு என்பவர் தனது பணியை மிகவும் அர்ப்பணிப்புடன் செய்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், 'கொரோனா வார்டில் எனக்கு பணி கிடைத்ததும் முழுமனதுடன் அதனை ஏற்றுக் கொண்டு பணிபுரிந்து வருகிறேன். இந்த வார்டில் இருப்பவர்கள், குடும்ப உறுப்பினர்கள் கூட அருகில் இல்லாமல் இருப்பதால் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறோம். புதிய நோயாளிகள் வார்டிற்கு வரும்போது எனக்கே மனதிற்குள் பயம் ஏற்படும்' என்றார்.
தனது குடும்பம் குறித்து நர்ஸ் ரீஜாஜா கூறுகையில், 'எனக்கு இரண்டு வயதில் குழந்தையுள்ளது. கொரோனா வார்டில் பணிபுரிந்து வருவதால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தி விட்டேன். இரவு நேரத்தில் குழந்தை உறங்க சிரமப்பட்டாலும், பாதுகாப்பை கருதி தாய்ப்பால் கொடுப்பதில்லை. கொரோனா வார்டில் இருந்து நோயாளிகள் குணமடைந்து செல்லும்போது உறவினர்களை விட நாங்கள் பெரு மகிழ்ச்சியடைகிறோம். புதிதாக நோயாளிகள் யாரும் வரக்கூடாது என்பதே எங்கள் அனைவரின் விருப்பமாக உள்ளது' என்கிறார்.
