'கொரோனாவ விட இது பெரிய சிக்கலா இருக்கு!?'... ஊரடங்கு அமலில் உள்ள நிலையில்... 'மதுபானம்' விநியோகிக்க கேரள அரசு முடிவு!... என்ன காரணம்?

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manishankar | Mar 30, 2020 12:12 PM

கேரளாவில் மது அருந்தாமல் இருக்க முடியாது என்ற மோசமான நிலையில் உள்ள குடிகாரர்களுக்கு குறைந்தபட்ச அளவு மதுபானங்களை வழங்க கேரள அரசு திட்டமிட்டுள்ளது.

kerala government decides to supply liquor who are in need

கொரோனா வைரஸ் பாதிப்பால் 21 நாட்கள் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டன.

இந்நிலையில், மது அருந்த முடியாத காரணத்தால் கேரளாவில் 5 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து மது அருந்த முடியாமல், மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை மனநிலையில் இருந்த 25க்கும் மேற்பட்டோர் மதுபோதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பேசிய கேரள் முதல்வர் பினராயி விஜயன், "தற்கொலைகளைத் தவிர்ப்பதற்காக குறைந்தபட்ச மதுபானங்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. லாக்டவுன் காலத்தில் அதிக குடிகாரர்களுக்கு மதுபானம் வழங்குவதற்கான வழிமுறைகளை பரிந்துரைக்குமாறு மாநில அரசு கலால் துறைக்கு அறிவுறுத்தியுள்ளது" என்று தெரிவித்தார்.

கேரளாவில் சுமார் 16 லட்சம் பேர் மது அருந்துபவர்கள் உள்ளனர். அவர்கள் நாள் தவறாமல் மது அருந்துகிறார்கள். அவர்களில், 45 சதவீதம் பேர் மிக மோசமாக குடிநோயால் பாதிக்கப்பட்டவர் ஆவர். முன்னதாக, மாநிலத்தில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூட வேண்டும் என்று எதிர்க்கட்சியும் இந்திய மருத்துவ சங்கமும் தெரிவித்தபோது, அரசிடம் மனநல மருத்துவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குடிநோய் பிரச்சனை குறித்து எச்சரித்திருந்தனர்.