திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரூ.1.02 கோடி நன்கொடையாக வழங்கிய முஸ்லீம் தம்பதி.. நெகிழ வைக்கும் பின்னணி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாதிருப்பதி கோவிலுக்கு ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளனர் முஸ்லீம் தம்பதியர் ஒருவர். மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்த இந்த செயல் பலரையும் நெகிழ செய்திருக்கிறது.
Also Read | "பசியோட யாரும் இருக்கக்கூடாது".. ஏழை மக்களுக்கு இலவச உணவு.. உலகத்தையே திரும்பி பார்க்க வச்ச துபாய் அரசர்..!
திருப்பதி
உலகில் மிகவும் பணக்கார கோவிலாக கருதப்படுகிறது திருப்பதி. தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்கின்றனர். இந்தியா மட்டும் அல்லாது உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இதனிடையே கோவிலுக்கு கணிசமான அளவில் பக்தர்கள் நன்கொடையும் அளித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னையை சேர்ந்த முஸ்லீம் தம்பதியர் ஒருவர் திருப்பதி கோவிலுக்கு ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக அளித்திருப்பது பொதுமக்களை நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.
நன்கொடை
சென்னையை சேர்ந்தவர் அப்துல் கனி. தொழிலதிபரான இவர் சமீபத்தில் தனது மனைவி சுபீனா பானுவுடன் திருப்பதி கோவிலுக்கு சென்றிருக்கிறார். ஏழுமலையானை வழிபட்ட பிறகு, அங்குள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டியை சந்தித்தனர். அப்போது அவரிடம் ரூ 1.02 கோடி ரூபாய்கான காசோலையை வழங்கியுள்ளனர் இந்த தம்பதியினர். மத நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் வெளிப்படுத்தும் விதமாக அமைந்த இந்த செயலை கண்ட அனைவரும் நெகிழ்ந்து போயுள்ளனர்.
இந்த தொகையில் 15 லட்ச ரூபாய் ஸ்ரீவெங்கடேஸ்வரா அன்ன பிரசாதம் அறக்கட்டளைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளை தினந்தோறும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உணவு வழங்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. மீதமுள்ள 87 லட்ச ரூபாய் ஸ்ரீ பத்மாவதி விருந்தினர் மாளிகை புதுப்பிக்கும் பணிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
முதல்முறை அல்ல
அப்துல் கனி திருப்பதி கோவிலுக்கு நன்கொடை அளிப்பது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்னர் கோவிலுக்கு காய்கறிகள் கொண்டுசெல்ல பயன்படும் குளிர்சாதன பெட்டியை அப்துல் கனி வழங்கியிருந்தார். இதன் மதிப்பு 35 லட்சம் ரூபாய் ஆகும். அதேபோல கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் வேகமெடுத்த சமயத்தில் டிராக்டருடன் பொருத்தப்பட்ட கிருமிநாசினி தெளிக்கும் இயந்திரத்தையும் அப்துல் கனி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.