"பசியோட யாரும் இருக்கக்கூடாது".. ஏழை மக்களுக்கு இலவச உணவு.. உலகத்தையே திரும்பி பார்க்க வச்ச துபாய் அரசர்..!
முகப்பு > செய்திகள் > உலகம்துபாயில் பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் மக்களுக்கு இலவச உணவு அளிக்கும் திட்டத்தை அந்த எமிரேட் அரசு செயல்படுத்த துவங்கியுள்ளது. இது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது.
துபாய்
மத்திய கிழக்கு நாடான ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒரு எமிரேட் துபாய். இதன் அரசராக இருப்பவர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம். எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வசதிகளை மேம்படுத்தவும் பல முக்கிய திட்டங்களை ஷேக் முகமது வெளியிட்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது துபாயில் எளிய பின்புலம் கொண்ட மக்கள் மற்றும் கூலி தொழிலாளர்கள் கட்டணமின்றி உணவு பெறும் நோக்கில் புதிய திட்டத்தினை அறிவித்திருக்கிறார் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம்.
மிஷின்
இந்த திட்டத்தின் அடிப்படையில் துபாயின் முக்கிய இடங்களில் உணவு வழங்கும் மிஷின்கள் பொருத்தப்பட்டுள்ளன. உணவு தேவைப்படும் மக்கள் இந்த மிஷின் மூலமாக பேக் செய்யப்பட்ட பிரெட்களை பெறமுடியும். ஓருநாளில் பலமுறை கூட பசியுடன் இருக்கும் மக்கள் இந்த மிஷின் மூலமாக உணவை பெற்றுக்கொள்ளலாம். கொரோனா தொற்று துவங்கிய காலத்தில் துபாய் அரசர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதில் "அமீரகத்தில் ஒருவர் கூட பசித்த வயிறுடன் உறங்க செல்லக்கூடாது அல்லது உணவு தேவையுடன் காத்திருக்க கூடாது" என குறிப்பிட்டிருந்ததுடன் அதனை நடைமுறைப்படுத்த பல்வேறு திட்டங்களையும் அறிவித்து வருகிறார். அதன் ஒருபகுதியாகவே இந்த திட்டம் பார்க்கப்படுகிறது.
முன்மாதிரி திட்டம்
இந்த திட்டத்திற்கு உதவ நினைப்பவர்கள் அரசுக்கு நன்கொடை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதுகுறித்து பேசிய AMAF அமைப்பின் பொதுச்செயலாளர் அலி அல் முதாவா," இந்த திட்டம் ஒரு முன்மாதிரியான திட்டமாகும். சமூக முன்னேற்றத்தில் அனைவருடைய பங்கும் இருக்க வேண்டும் என்பதை நிறுவவும், சக மனிதர்களின் பசியை போக்க மக்கள் முன்வர ஊக்குவிக்கவும் இந்த திட்டம் உதவும். இதன்மூலம் கஷ்டப்படும் மக்களின் உணவு குறித்த பயத்தினை போக்கிட முடியும்" என்றார்.