‘பேத்தி படிப்புக்காக பட்ட கஷ்டம்’!.. ராத்திரி, பகலா வேலை, ‘ஆட்டோதான் வீடு’.. முதியவர் முகத்தில் சந்தோஷத்தை கொடுத்த மக்கள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபேத்தியின் படிப்புக்காக ஆட்டோவிலேயே வாழ்ந்து வந்த முதியவருக்கு பலரும் உதவி செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் கார் என்ற பகுதியில் தேஸ்ராஜ் என்ற 74 வயது முதியவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள் இருந்தனர். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் வேலைக்கு சென்ற 40 வயது மதிக்கத்தக்க இவரின் மூத்த மகன் வீடு திரும்பவில்லை. இதனை அடுத்து ஒரு வாரம் கழித்து ஆட்டோ ஒன்றில் இறந்த நிலையில் அவரது மகனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
இதனால் மனமுடைந்த தேஸ்ராஜ், ‘அவன் இறந்த பின், என்னுடைய பாதி உயிர் போய்விட்டதைப் போல் உணர்ந்தேன். ஆனாலும், பொறுப்புகளை சுமக்க வேண்டியதிருந்தது. அப்போது உட்கார்ந்து அழுவதற்குக் கூட எனக்கு நேரம் கிடைக்கவில்லை. மகன் இறந்த அடுத்த நாளே ஆட்டோ ஓட்டும் வேலையை தொடர்ந்தேன்’ என கூறியிருந்தார்.
இந்த வலி மறைவதற்குள் அடுத்த 2 ஆண்டுகளில் இவரின் 2-வது மகன் தற்கொலை செய்து கொண்டார். இதனால் தனது மருமகள்கள், 4 பேர குழந்தைகளை பாதுகாக்கும் பொறுப்பு தேஸ்ராஜுக்கு வந்து விட்டது. அப்போது 9ம் வகுப்பு படித்த பேத்தியின் கல்வி மற்றும் குடும்ப செலவுக்காக காலை 6 மணி முதல் நள்ளிரவு வரை தேஸ்ராஜ் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். அதில் கிடைக்கும் பணத்தில் பேத்தியின் கல்வி செலவு போக, மிகக்குறைந்த பணத்தை வைத்தே குடும்ப செலவுகளை செய்து வந்துள்ளார். பல நாட்கள் சாப்பிடுவதற்கு உணவு இன்றி தேஸ்ராஜின் குடும்பம் தவித்து வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேஸ்ராஜின் பேத்தி 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 80 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தார். இதனால் மகிழ்ச்சியடைந்த தேஸ்ராஜ், அன்று ஒருநாள் வாடிக்கையாளர்களுக்கு இலவச சவாரி செய்துள்ளார். இந்த நிலையில் பி.எட் படிக்க வேண்டும் என பேத்தி விரும்பியதால், கல்லூரி கட்டணத்துக்காக குடியிருந்த வீட்டை விற்றுள்ளார். பின்னர் தனது மனைவி, மருமகள்கள் மற்றும் பேர குழந்தைகளை கிராமத்தில் உள்ள உறவினர்கள் வீட்டில் தங்க வைத்துள்ளார். இவர் மும்பையில் தொடர்ந்து ஆட்டோ ஓட்டிக்கொண்டு, ஆட்டோவிலேயே சாப்பிட்டு, தூங்கியுள்ளார்.
இந்த நிலையில் தேஸ்ராஜின் நிலை குறித்து அறிந்த கஞ்சன் என்பவர், பேஸ்புக் மூலம் பலருக்கும் இதை தெரியப்படுத்தியுள்ளார். இதனைப் பார்த்த பலரும் தேஸ்ராஜுக்கு உதவ முன்வந்தனர். கஞ்சன் பேஸ்புப் பதிவைப் பார்த்து 200-க்கும் மேற்பட்டோர் 5.3 லட்சம் ரூபாய் வரை அனுப்பியுள்ளனர். மேலும் தேஸ்ராஜின் பின்னணி பற்றி சமூக வலைதளங்களில் அறிந்த பலரும் உதவியதால், 24 லட்சம் ரூபாய் அவருக்கு கிடைத்தது. இதற்கான காசோலை அவரிடம் வழங்கியுள்ளனர். இந்த நிலையில் தனக்கு உதவிய அனைவருக்கும் மகிழ்ச்சி ததும்ப தேஸ்ராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.