"அன்னைக்குன்னு பாத்து 'இஷாந்த்' செம 'தூக்கம்'... அவர அடிச்சு எழுப்பி தான் அந்த 'விஷயத்த' சொன்னேன்... 'பழைய' நினைவுகளை பகிர்ந்த 'கோலி'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றிருந்தது.
இதனைத் தொடர்ந்து , இரண்டு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி, பகலிரவு போட்டியாக, உலகின் மிகப்பெரிய மைதானமான அகமதாபாத் மோட்டேரா மைதானத்தில் நடக்கவுள்ளது. காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா, நாளைய டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் பட்சத்தில் அது அவரது 100 ஆவது டெஸ்ட் போட்டியாக அமையும்.
இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் இதுவரை கபில்தேவ் மட்டுமே 100 டெஸ்ட் போட்டிகள் ஆடியுள்ளார். இதனால், 100 டெஸ்ட் போட்டிகள் விளையாடப் போகும் இரண்டாவது இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை அவர் பெறுவார். இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கேப்டன் விராட் கோலி, இஷாந்த் ஷர்மாவை புகழ்ந்த நிலையில், அவருடனான கடந்த கால நினைவுகள் சிலவற்றையும் பகிர்ந்து கொண்டார்.
'இஷாந்த் ஷர்மா என்னுடன் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகள் விளையாடத் தொடங்கினார். மாநில மற்றும் ரஞ்சி டிராபியின் போது, நீண்ட காலமாக நாங்கள் ரூம் மேட்ஸாக இருந்துள்ளோம். இஷாந்த் ஷர்மா இந்திய அணிக்காக ஆட தேர்வு செய்யப்பட்ட போது, ஒரு மதிய நேரத்தில், அவர் தூங்கிக் கொண்டிருந்தார். நான் அவரை உதைத்து எழுப்பி, அந்த செய்தியைச் சொல்ல வேண்டியிருந்தது. அந்த அளவுக்கு நாங்கள் இருந்துள்ளோம். இத்தனை ஆண்டுகளாக அவர் பந்து வீசி வருவதைக் காண மகிழ்ச்சியாக உள்ளது.
தற்போதுள்ள கால கட்டங்களில் ஒரு வேகப்பந்து வீச்சாளர், தனது உடலை சரிவர பராமரித்து, 100 டெஸ்ட் போட்டிகள் ஆடுவது மிகவும் அரிதான ஒன்று. 100 ஆவது போட்டியில் ஆடவுள்ள இஷாந்த் ஷர்மா, தொடர்ந்து நிறைய போட்டிகளில் ஆட வேண்டும் என நான் விரும்புகிறேன்' என இஷாந்த் ஷர்மாவுக்கு தனது பாராட்டுக்களை கோலி தெரிவித்துள்ளார்.