இந்தியாவில் 'கொரோனா' பாதிப்பு அதிகமாவதால்... 'ஊரடங்கு' நீட்டிக்கப்பட வாய்ப்பு? ... மாநில முதல்வர்களுடன் 'பிரதமர்' முக்கிய ஆலோசனை!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க இந்தியா முழுவதும் ஏப்ரல் 14 - ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஊரடங்கு ஆரம்பித்து 15 நாட்களான நிலையில் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வீட்டை விட்டு வெளியில் வர அறிவுறுத்தப்பட்டிருந்தனர். ஊரடங்கு முடியும் தருவாயில் உள்ள நிலையில், நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவல் இந்தியா முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கிட்டத்தட்ட நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தியாவில் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட சில மாநிலங்கள் ஊரடங்கை இன்னும் நீட்டிக்க வேண்டி மத்திய அரசிடம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து பல்வேறு நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். இன்று காலை அரசியல் கட்சி தலைவர்களுடன் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தியிருந்தார்.
இந்நிலையில் அனைத்து மாநில முதல்வர்களுடன் ஏப்ரல் 11 -ம் தேதி (சனிக்கிழமை) வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக மாநில முதல்வர்களுடன் இரண்டாவது முறையாக பிரதமர் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
