கொத்தாக 'மடிந்து' விழுந்த வௌவால்கள்... அச்சத்தில் 'உறைந்த' கிராம மக்கள்... என்ன காரணம்?
முகப்பு > செய்திகள் > இந்தியாநாடு முழுவதும் கொரோனா வைரஸின் பாதிப்பு நாள்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்தியாவில், இதுவரை சுமார் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த கொடிய வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தின் பெல்காட் என்னும் பகுதியில் அமைந்துள்ள தோட்டம் ஒன்றில் ஐம்பதுக்கும் மேற்பட்ட வௌவால்கள் செத்து விழுந்துள்ளன. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். உலகளவில் கொரோனா வைரஸ் பரவ வௌவாலும் ஒரு காரணம் என கூறப்பட்டு வந்த நிலையில், இதுகுறித்து வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர்.
பின்னர் வௌவால் ஒன்றை எடுத்து ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து அதிக வெப்பம் காரணமாக வௌவால்கள் இறந்திருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மரங்களில் போதிய தண்ணீரை விடுமாறு அப்பகுதி மக்களிடம் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அந்த தோட்டத்தின் அருகே செங்கல் சூளை ஒன்று உள்ள நிலையில், அருகிலுள்ள குளத்தில் நீரும் வறண்டு போயுள்ளது. அதே போல கோடை வெப்பம் அதிகரித்து வருவதால் அப்பகுதியும் அதிகம் வறண்டு போயுள்ளது.
இதுவரை 52 வவ்வால்கள் உயிரிழந்துள்ள நிலையில், ஆய்வுகளின் முடிவுகளுக்கு பின்னரே வௌவால்கள் இறந்ததற்கான சரியான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக பீகார் மாநிலத்திலும் இது போன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த பகுதியில் சுமார் 200 வௌவால்கள் இறந்து விழுந்துள்ள நிலையில் அதற்கான காரணம் குறித்து ஆய்வு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
