வீட்ட விட்டு 'தொரத்திட்டாங்க'... 'பிச்சை' எடுக்குறேன்னு தெனமும் அழுவேன்... ஒரே நாளில் 'மாறிப்போன' வாழ்க்கை!
முகப்பு > செய்திகள் > இந்தியாஊரடங்கில் பிச்சை எடுத்த இளம்பெண்ணின் வாழ்க்கை ஒரே நாளில் மாறிப்போய் இருக்கிறது.
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர் லலிதா பிரசாத். வியாபாரியான இவர் ஊரடங்கால் கஷ்டப்படும் மக்களுக்கு உதவி செய்யும் வகையில் ஏழை,எளிய மக்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கி வருகிறார். இவருக்கு உதவியாக இவரிடம் டிரைவராக வேலை செய்யும் அனில் என்பவரும் செல்வது வழக்கம்.'
அப்போது குறிப்பிட்ட ஒரு பகுதியில் ஒரு பெண் தினமும் வந்து உணவு பொட்டலங்கள் வாங்கி செல்வதை பார்த்திருக்கிறார். சில நாட்களில் அந்த பெண்ணுக்கும், அனிலுக்கும் நட்பு ஏற்பட்டது. தொடர்ந்து நீ ஏன் பிச்சை எடுக்கிறாய்? என அனில் அந்த பெண்ணிடம் கேட்டுள்ளார். பதிலுக்கு அந்த பெண் தனது பெயர் நீலம் என்றும், தனது தந்தை பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டதால் தனது சகோதரர் தன்னை வீட்டில் இருந்து விரட்டி விட்டதாக தெரிவித்தார். மேலும் தாயுடன் வெளியேறிய அவர் பிழைப்பதற்கு வேலை எதுவும் கிடைக்காததால் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக கண்ணீருடன் சொல்லியிருக்கிறார்.
அவர் மீது மனம் இறங்கிய அனில் அவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். தனது முதலாளி லலித் பிரசாத்திடம் இதுபற்றி தெரிவித்தார். இதையடுத்து அவரின் முதலாளி அவர் அனில்-நீலம் இருவருக்கும் நேற்று திருமணம் செய்து வைத்தார். இதுகுறித்து நீலம், ''கடவுள் என்னை சோதித்ததாக தினமும் அழுவேன். ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு ஒருவேளை சாப்பாட்டுக்குகூட கஷ்டப்படும் நிலை ஏற்பட்டது. ஆனால் கடவுள் என்னை கைவிடவில்லை,'' என்று தெரிவித்து இருக்கிறார்.