திண்டுக்கல் டு கேரளா.. பசியுடன் 300 கிமீ நடந்து போன நபர்.. கலங்க வச்ச பின்னணி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரள மாநிலம் பத்தினம் திட்டாவை சேர்ந்த நபர் ஒருவர் திண்டுக்கல்லில் இருந்து சொந்த ஊருக்கு நடந்தே சென்று இருக்கிறார். இதற்கான காரணம் தான் பலரையும் நெகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது.
கேரள மாநிலம், பத்தினம் திட்டாவை சேர்ந்தவர் அனில். இவரிடம் செல்போன் கிடையாது. அதேபோல இவருக்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் என யாருடைய போன் நம்பரும் தெரியாது. இந்நிலையில் ஆந்திராவில் உள்ள நர்சிங் கல்லூரி ஒன்றில் தனது மருமகளை சேர்த்து விட குடும்பத்துடன் சென்று இருக்கிறார் அனில். மருமகளை கல்லூரியில் சேர்த்து விட்டு குடும்பத்தினருடன் அவர் வீடு திரும்பியிருக்கிறார். ஆந்திராவில் இருந்து திருப்பதி வழியாக காட்பாடி, சேலம், திண்டுக்கல் வரை வரும் ரயிலில் பயணித்திருக்கிறது அனிலின் குடும்பம்.
அப்போது பசி எடுக்கவே ரயிலில் இருந்து இறங்கி சாப்பிட சென்று இருக்கிறார் அனில். யாரிடமும் சொல்லாமல் இறங்கி அவர் சென்றது உறவினர்களுக்கு தெரியவில்லை. ஆனால் சாப்பிட்டு, அவர் திரும்பி வருவதற்குள் ரயில் புறப்பட்டு சென்று விட்டது. இதனை அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் ரயில் நிலையத்தில் நெடுநேரம் அமர்ந்திருக்கிறார் அனில். அப்போது பணியில் இருந்த ரயில்வே காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தும் போது நடந்ததை கூறியுள்ளார்.
இதனையடுத்து அனிலுக்கு இருநூறு ரூபாய் கொடுத்து ஒரு வாகனத்தில் அனுப்பி வைத்துள்ளனர். அங்கிருந்த போலீசார் ரயில்வே நிலையத்திலிருந்து வத்தலகுண்டு, பெரியகுளம் வழியாக தேனி வரை அனில் வந்து சேர்ந்துள்ளார். அதன் பிறகு கம்பம், கூடலுர் என கேரள எல்லையான குமுழிக்கு நடந்தே சென்று இருக்கிறார். கையில் இருந்த பணமும் காலியாகிவிட்டதால் பசியுடன் நடந்து சென்ற அணில் யாரிடமும் காசு கேட்க கூச்சப்பட்டு கொண்டு நடந்திருக்கிறார்.
மற்றொருபுறம் கேரளாவின் செங்கனூர் சென்று சேர்ந்த பிறகு அனிலின் குடும்பத்தினருக்கு அவர் காணாமல் போனது தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து அவர் அவர்கள் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றனர். இதனிடையே கோவில்களில் வழங்கும் அன்னதானங்களை சாப்பிட்டுக் கொண்டும் இரவு நேரங்களில் பேருந்து ரயில்வே நிலையங்களில் உறங்கியும் தனது பயணத்தை தொடர்ந்திருக்கிறார் அனில். ஒரு வழியாக அவர் கோட்டையம் சென்று சேர்ந்து இருக்கிறார்.
ஆனால் தொடர்ந்து நடந்து வந்ததால் அவரால் மேற்கொண்டு தனது பயணத்தை தொடர முடியாமல் போயிருக்கிறது. அப்போது அங்கிருந்த சிலர் அவரை கவனித்து விசாரித்து இருக்கின்றனர். அவர்களில் அனிலின் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவரும் இருந்திருக்கிறார். உடனடியாக இதுகுறித்து குடும்பத்தினருக்கு அவர் தகவல் தெரிவித்து இருக்கிறார். இதன் மூலமாக அனில் தனது குடும்பத்தாரை மீண்டும் சந்தித்திருக்கிறார். கையில் பணம் இல்லாமல் யாருடைய போன் நம்பரும் தெரியாமல் சுமார் 300 கிலோ மீட்டர் நடந்தே சென்ற அனிலின் கதை பலரையும் நெகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது.
Also Read | "இந்திய அணிக்கு நிச்சயம் திரும்புவேன்.. என் பையோ பிக் படத்தில் இவர்தான் ஹீரோ".. மனம் திறந்த நடராஜன்..!