இங்க இருந்த கிராமம் எங்கப்பா?.. வீடுகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீஸ்.. 4 வருஷத்துக்கு ஒரு முறை நடைபெறும் சுவாரஸ்ய சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கிருஷ்ணகிரி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த மக்கள் அனைவரும் ஒரே சமயத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சுவாமி தரிசனம் பார்க்க சென்றிருக்கின்றனர்.
உலகில் மிகவும் பணக்கார கோவிலாக கருதப்படுகிறது திருப்பதி. தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்கின்றனர். இந்தியா மட்டும் அல்லாது உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து செல்கின்றனர். திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க முன்கூட்டியே முன்பதிவு செய்திருந்தாலும் தரிசனத்திற்கு சில சமயங்களில் நாள்கணக்கில் காத்திருக்க வேண்டியிருக்கும். இருப்பினும் வெங்கடாஜலபதியை காண பக்தர்கள் ஆர்வத்துடன் சென்று கொண்டுதான் இருக்கின்றனர். இதனிடையே கோவிலுக்கு கணிசமான அளவில் பக்தர்கள் நன்கொடையும் அளித்து வருகின்றனர். இந்தக் கோவிலை திருப்பதி திருமலா தேவஸ்தானம் நிர்வகித்து வருகிறது.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள வசந்தபுரம் குடியிருப்பு பகுதியை சேர்ந்த மக்கள் திரளாக திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சென்று இருக்கின்றனர். வயதானவர்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே தற்போது இந்த குடியிருப்பு பகுதியில் வசித்து வருவதால் போலீசார் இப்பகுதிக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
வசந்திபுரம் குடியிருப்பு மக்களை பொறுத்தவரையில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் திரளாக கிளம்பிச் சென்று திருப்பதி ஏழுமலையானை தரிசித்து வருவது வழக்கமாம். அதன்படி சில தினங்களுக்கு முன்னர் வசந்திபுரம் குடியிருப்பு பகுதியை சேர்ந்த மக்கள் திருப்பதிக்கு சென்றிருக்கின்றனர். வயதனவர்கள் மற்றும் உடல் நிலை சரியில்லாதவர்கள் என ஓரிரு நபர்கள் மட்டுமே தற்போது இருப்பதால் கிராமமே வெறிச்சோடி காணப்படுகிறது.
இதனையடுத்து போச்சம்பள்ளி காவல் நிலைய ஆய்வாளர் பிரபாவதி குடியிருப்பு பகுதியின் பாதுகாப்பை முன்னிட்டு இரண்டு காவலர்களை பாதுகாப்பு பணியில் நிர்ணயித்திருக்கிறார். இவர்களுடன் கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவர் எஸ். ரங்கநாதன் அவ்வப்போது காவலர்களுடன் இணைந்து பாதுகாப்பு பணியை மேற்கோண்டு வருகிறார். கிராமத்தினர் முழுவதும் திரளாக திருப்பதி கிளம்பிச் சென்ற சம்பவம் பலரையும் ஆச்சர்யப்பட செய்திருக்கிறது.