"கார்டு மேலே இருக்க நெம்பர் சொல்லுங்கோ சார்".. ஆபீஸர்னு நெனச்சு OTP சொன்ன நபர்.. அடுத்த செகண்ட் வந்த அதிர்ச்சி மெசேஜ்.!
முகப்பு > செய்திகள் > இந்தியாபுதுச்சேரியில் வங்கி அதிகாரி போல நடித்து ஒருவரிடம் பணத்தை சுருட்டிய மர்ம கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.
இணையமும், தகவல் தொழில்நுட்ப வசதிகளும் மனித குலத்தின் மகத்தான சாதனைகளை நிகழ்த்த காரணமாக இருந்திருக்கின்றன. நொடிப்பொழுதில் நம்மால் உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் நடைபெறும் விஷயங்களை தெரிந்துகொள்ள முடிகிறது. நினைத்த பொருட்களை ஆன்லைன் மூலமாக வீட்டில் இருந்தபடியே வாங்கவும் முடிகிறது. ஆனால், இந்த தொழில்நுட்பங்களை சிலர் தவறான வழிகளிலும் பயன்படுத்தி வருகின்றனர்.
அப்பாவி மக்களின் தகவல்களை திருடுவது, அவர்களுடைய வங்கி குறித்த தகவல்களை பெற்று பணத்தை கொள்ளையடிப்பது என சைபர் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் புதுச்சேரியை சேர்ந்த ஒருவரிடம் இருந்து சுமார் ஒரு லட்ச ரூபாயை சுருட்டியுள்ளது மர்ம கும்பல் ஒன்று.
புதுச்சேரியின் குரும்பாபேட் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவருக்கு சில தினங்களுக்கு முன்னர் ஒரு போன்கால் வந்திருக்கிறது. அதில் பேசிய நபர் தன்னை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து மேலாளர் பேசுவதாக அறிமுகப்படுத்திக்கொண்டுள்ளார். தொடர்ந்து ஏடிஎம் கார்டு புதுப்பிக்க வேண்டும் எனக்கூறியுள்ளார். இதனை தொடர்ந்து போனுக்கு வந்திருக்கும் ஒடிபி-யை சொல்லும்படி கூறியுள்ளார் அந்த மர்ம ஆசாமி.
அண்ணாதுரையும் அதனை நம்பி தனக்கு வந்த ஒடிபி-யை சொல்லியிருக்கிறார். சில நிமிடங்களில் அவருடைய வங்கி கணக்கில் இருந்து 96,250 ரூபாய் பணம் எடுக்கப்பட்டதாக மெசேஜ் வந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கிறார் அண்ணாதுரை. இதனையடுத்து இதுகுறித்து காவல்துறையில் அவர் புகார் அளித்திருக்கிறார். இதேபோல, நெட்டப்பாக்கம், லாஸ்பேட்டை ஆகிய பகுதிகளிலும் மர்ம நபர்கள் மோசடியில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இந்த மர்ம கும்பலை பிடிக்க காவல்துறையினர் விசாரணையில் இறங்கியுள்ளனர்.