சும்மா சுர்ருன்னு.. உலகத்தின் காரமான மிளகாய்.. அசால்ட் காட்டிய நபர்.. மிரண்டு போன கின்னஸ் அதிகாரிகள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகின் மிகவும் காரமான மிளகாயை சாப்பிட்டு தனது முந்தைய கின்னஸ் சாதனையை முறியடித்திருக்கிறார் அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர்.
காரமான உணவுகள் பலருக்கும் பிடிக்கத்தான் செய்கிறது. உணவுகளுக்கு காரம் சேர்க்க மிளகாய்களை மக்கள் பயன்படுத்துகின்றனர். அதிலும் பல வகை மிளகாய்கள் சந்தையில் இருக்கின்றன. ஒவ்வொரு வகையும் ஒவ்வொரு அளவிலான காரம் கொண்டவை. ஆனால் இதில் ஜாம்பவான் வகை ஒன்று இருக்கிறது. அதுதான் கரோலினா ரீப்பர்ஸ் (Carolina Reapers)
பொதுவாக மிளகாயின் காரத்தன்மையை Scoville Heat Units மூலம் அளவிடுகிறார்கள். உணவு பொருளில் உள்ள காரத்தை அளவிடும் வேதியல் பரிசோதனை இது. அதன்படி கரோலினா ரீப்பர்ஸ்-ன் Scoville Heat Units அளவீடு 1,641,183 ஆகும். இதனை நறுக்கினாலே கார நெடி மூக்கை துளைத்துவிடும். ஆனால், இதனை சாப்பிட்டு கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார் அமெரிக்காவை சேர்ந்த ஒருவர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் கிரிகோரி ஃபாஸ்டர். இயல்பாகவே இவருக்கு காரம் என்றால் பிடிக்குமாம். அதனாலேயே இந்த சாதனையை இவர் செய்ய முடிவெடுத்திருக்கிறார். கிரிகோரி ஃபோஸ்டர் கடந்த 9 மாதங்களுக்கு முன்பாக 3 கரோலினா ரீப்பர் மிளகாய்களை 8.72 வினாடிகளில் சாப்பிட்டு முடித்ததற்காக கின்னஸ் உலக சாதனை படைத்திருந்தார்.
இந்நிலையில், தன்னுடைய இந்த சாதனையை தற்போது அவரே முடியடித்திருக்கிறார். கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி உலகின் காரமான மிளகாயான கரோலினா ரீப்பர்ஸ்-ல் 10 மிளகாய்களை சாப்பிட்டிருக்கிறார் கிரிகோரி. அதுவும் 33.15 வினாடிகளில். இதனை அங்கீகரிக்கும் விதமாக கின்னஸ் அமைப்பு அவருக்கு சான்று அளித்து இருக்கிறது. இதுபற்றி அவர் பேசுகையில்,"இது வலியுடன் கூடிய பேரார்வம் என கருதுகிறேன்" எனக் கூறியிருக்கிறார்.
ஹாட் சாஸ் (hot sauce) தயாரிப்பு நிறுவனத்தை நடத்திவரும் கிரிகோரி தனது பண்ணையில் உலகின் காரமான மிளகாய்களை வளர்த்தும் வருகிறாராம். முன்னதாக இந்தியாவில் விளைவிக்கப்படும் புட் ஜோலோகியா எனும் காரமான மிளகாயையும் சாப்பிட்டு சாதனை படைத்திருந்தார் கிரிகோரி.