'பணத்தை' சிக்கனமாக 'செலவு' செய்யுங்கள்... 'இனிவரும்' காலங்கள் 'சவாலாக' இருக்கும்... தொழில்கள் 'புத்துயிர்' பெற 'ஆண்டுகள்' கூட ஆகலாம்... 'பொருளாதார' நிபுணர்கள் 'எச்சரிக்கை...'

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Apr 09, 2020 07:07 PM

முடங்கிய தொழில்கள் புத்துயிர் பெற ஆண்டுகள் கூட ஆகலாம் என்பதால் இனி வரும் காலங்கள் சவாலானதாக இருக்கக் கூடும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

It may take years for businesses to revive-Economists warn

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் 21 நாள் முழு ஊரடங்கை கடந்த மாதம் 25ம் தேதி மத்திய அரசு அமல்படுத்தியது. இருப்பினும், நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசிடம் பெரும்பாலான மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

ஊரடங்கு உத்தரவு காரணமாக தொழில்கள் அனைத்தும் பெரும் சரிவை சந்தித்துள்ளன. போக்குவரத்து, சுற்றுலா, ஹோட்டல் தொழில் துறையினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் துறைகளில் 5 சதவீதம் சரிவடைந்தாலே நாட்டின் மொத்த வளர்ச்சி ஒரு சதவீதம் பாதிக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காரணமாக, இந்தியாவின் 80 சதவிதம் நிறுவனங்கள், பணபுழக்கம் இல்லாமல் திணறி வருகின்றன. இந்தியாவில் தற்போது வரை 53 சதவித நிறுவனங்களில் பொருளாதார சரிவு தொடங்கி விட்டதாக FICCI அமைப்பு கூறியுள்ளது.

கப்பல் மற்றும் சரக்கு போக்குவரத்தை பொறுத்தவரை, நாள் ஒன்றிற்கு சுமார் 80 முதல் 90 சதவிதம் வரை சரக்கு போக்கு வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத்திலும் அமெரிக்கா மற்றும் சீனாவுடன் நமது தொடர்பு அதிகமாக இருப்பதால் இந்தியாவிற்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கைவிட்டு போகும் நிலை உருவாகியுள்ளது. 2020ம் ஆண்டின் முதல் 6 மாதத்திற்கான வளர்ச்சி கற்பனை செய்ய முடியாத அளவிற்கு குறையும் என்பதில் நிபுணர்களிடையே எந்த மாற்று கருத்தும் இல்லை.

இப்படி இருக்க கூடிய நிலையில், இனி வரும் காலங்கள் மேலும் சவாலாக இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அதனால் சமானிய மக்கள், தங்கள் கையிருப்பில் இருக்கும் பணத்தை மிக சிக்கனமாக செலவு செய்ய வேண்டிய தருணம் இது என்றும் பொருளாதார நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

கொரோனாவின் தாக்கம் மார்ச் மாதம் வரை மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜுன் மாதம் வரை நீடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் சுமார் 40 கோடி தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு கணித்துள்ளது.