'3-ம் நிலைக்கு போகலாம்'...'அதுக்கு வாய்ப்பிருக்கு'... 'எச்சரித்த முதல்வர்'...ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் 2-ம் நிலையில் உள்ள கொரோனா 3-ம் நிலைக்கு செல்ல வாய்ப்பிருப்பதாக தமிழக முதல்வர் எச்சரித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அமைக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையிலான 12 பணி குழுக்களுடன், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.
அப்போது பேசிய முதல்வர், ''கொரோனா தடுப்புக்கான மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் கையிருப்பில் உள்ளன. முக கவசம், மாத்திரைகள் போதிய அளவுக்கு உள்ளன. 32,371 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள் தயாராக உள்ளன. 3371 வெண்டிலேட்டர்கள் தயாராக உள்ளன. 2500 வெண்டிலேட்டர்கள் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்காக 14,525 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.
கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் 12 குழுக்கள் செயல்பட்டு வருகிறது. அவர்கள் அனைவரும் மிகவும் திறம்பட பணியாற்றி வருகிறார்கள். 144 தடை உத்தரவை மீறியவர்களிடம் இருந்து ரூ.40 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு நீட்டிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த முதலவர், கொரோனா வைரஸ் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என கூறினார். மேலும் தமிழகத்தில் 2-ம் நிலையில் உள்ள கொரோனா 3-ம் நிலைக்கு செல்ல வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறினார்.
