கொரோனா தடுப்பு பணியில்... செவிலியர்கள் 'சேலை' அணிய தடை!... என்ன காரணம்?

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manishankar | Apr 09, 2020 07:49 PM

கேரளாவில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் நர்சுகள் மற்றும் நர்சிங் உதவியாளர்கள் அனைவரும் இனி சேலை அணிவதற்கு பதில் சுடிதார் அல்லது குர்தா அணிய வேண்டும் என்று மாநில சுகாதார துறை முதன்மை செயலாளர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

kerala bans sarees for nurses involved in covid19 management

கொரோனா வைரஸ் நோய் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகள், நர்சிங் உதவியாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுகிறது.

அவர்கள் உடல் முழுவதும் கவச உடை அணிந்து கொரோனா சிறப்பு வார்டுகளுக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். இருந்தும் இந்த வார்டுகளில் பணிபுரியும் சில நர்சுகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு செய்த போது கொரோனா வார்டுகளில் பணிபுரியும் நர்சிங் உதவியாளர்கள் பலரும் சேலை அணிந்திருப்பது தெரியவந்தது. சேலை அணிந்து செல்லும் நர்சுகள், கொரோனா பாதுகாப்பு உடைகளை முறையாக அணிய முடிவதில்லை. அவர்களின் கால் பகுதிகள் சரியாக மூடப்படாமல் உள்ளது.

கொரோனா பாதுகாப்பு கவச உடைகள் இருகால்களின் வழியாக அணிந்து முழு உடலையும் மறைத்து இருக்கும். இதற்கு சேலை இடையூறாக இருக்கிறது.

உடலை முழுமையாக மறைக்காததால் கொரோனா வார்டுகளில் பணிபுரியும் நர்சுகள், நர்சிங் உதவியாளர்கள் பலருக்கும் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இப்பணியில் ஈடுபடும் அனைவரும் இனி சுடிதார் அல்லது குர்தா அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இதனை கேரள சுகாதார துறை முதன்மை செயலாளர் பிறப்பித்து உள்ளார். இந்த உத்தரவு அனைத்து அரசு மருத்துவ கல்லூரி முதல்வர்களுக்கும், ஆஸ்பத்திரி அதிகாரிகளுக்கும் அனுப்பபட்டு உள்ளது.