"எல்லா சந்தோஷமும் போய்டுச்சு.. தலைமறைவா இருக்கேன்".. லாட்டரியில் 25 கோடி வென்ற ஆட்டோ டிரைவர்.. மனுஷனுக்கு இப்படி ஒரு பிரச்சனையா..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் ரூ.25 கோடி மதிப்பிலான ஓணம் பம்பர் லாட்டரியை வென்ற ஆட்டோ ஓட்டுநர் அனூப் வெற்றிக்கு பிறகு மன நிம்மதியை இழந்துவிட்டதாக தெரிவித்திருப்பது பலரையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.
லாட்டரி
கேரளாவின் ஸ்ரீவரஹம் பகுதியைச் சேர்ந்தவர் அனூப். ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவர் லாட்டரி டிக்கெட் வாங்குவதை வாடிக்கையாக கொண்டிருந்திருக்கிறார். இந்நிலையில், கடந்த வாரம் அனூப் TJ 750605 என்ற ஓணம் பம்பர் லாட்டரியை வாங்கியிருந்தார். முதலில் வேறு ஒரு டிக்கெட்டை தேர்வு செய்த அனூப், அது பிடிக்கவில்லை என இந்த டிக்கெட்டை வாங்கியிருந்தார். அந்த டிக்கெட் தான் தனது வாழ்க்கையை மாற்றப்போகிறது என்பது அனூப்பிற்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.
தனது மகனின் உண்டியல் காசு எடுத்து அனூப் வாங்கிய அந்த டிக்கெட்டிற்கு 25 கோடி ரூபாய் பரிசாக விழுந்திருக்கிறது. மலேசியாவுக்கு சமையல்காரராக செல்ல இருந்த அனூப் இதன்மூலம் கோடீஸ்வரராக மாறினார். சுவாரஸ்யமாக அவர் வங்கியில் கடன் கேட்டிருந்திருக்கிறார். பரிசு விழுந்த பிறகு வங்கியில் இருந்து அனூப்பிற்கு போன் வந்திருக்கிறது. அப்போது தனக்கு கடன் தேவையில்லை என அனூப் தெரிவித்திருக்கிறார். கடந்த 22 ஆண்டுகளாக லாட்டரி சீட்டுகளை வாங்கி வரும் அவர், கடந்த காலங்களில் சில நூறுகள் முதல் அதிகபட்சம் ரூ.5,000 வரையிலான தொகையை வென்றுள்ளார்.
கோடீஸ்வரர்
கடந்த ஆண்டுவரை ஓணம் பம்பர் பரிசுத்தொகை 12 கோடி ரூபாயாக இருந்தது. இந்த ஆண்டுதான் 25 கோடி ரூபாயாக பரிசுத்தொகை உயர்த்தப்பட்டது. இதன்மூலம் கேரள லாட்டரி வரலாற்றிலேயே அதிக தொகை பரிசாகப் பெற்றவர் என்ற பெருமையை அடைந்திருக்கிறார் அனூப். வரி பிடித்தம் செய்யப்பட்ட பிறகு, அனூப் 15 கோடிக்கு சொந்தக்காரராக மாறியுள்ளார். ஆனால் இப்போது அவருக்கு வேறு ஒரு சிக்கல் முளைத்திருக்கிறது. லாட்டரியில் பரிசு விழுந்தது முதல், பலரும் கடன்கேட்டு தொந்தரவு செய்வதாகவும், அதனால் தலைமறைவாக வாழ்ந்து வருவதாகவும் கவலையுடன் தெரிவித்திருக்கிறார் அனூப். இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் அனூப் வெளியிட்டிருக்கிறார்.
கவலை
அந்த வீடியோவில்,"ஓணம் சிறப்பு லாட்டரியில் பரிசு கிடைத்தபோது மிகவும் சந்தோஷமாக இருந்தது. பல மீடியாக்களில் இருந்து என்னை பேட்டியெடுக்க வந்த போது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், இப்பொது அனைத்து மகிழ்ச்சியும் போய்விட்டது. தினமும் உதவிகேட்டு பலபேர் வருகிறார்கள். நான் இப்போது எனது சகோதரியின் வீட்டில் இருக்கிறேன். எனது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை. அதனாலேயே இங்கு வந்திருக்கிறேன். ஆனால், இதையும் தெரிந்துகொண்டு இங்கேயும் ஆட்கள் வருகிறார்கள். இதை நான் பேசிக்கொண்டிருக்கும்போதே வீட்டு கதவை தட்டுகிறார்கள். என்னுடைய குழந்தையை மருத்துவனைக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலையில் இருக்கிறேன். எதற்காக இவ்வளவு பரிசு கிடைத்தது என இப்போது யோசிக்கிறேன். மூன்றாம் பரிசு கிடைத்தால் கூட நிம்மதியாக இருந்திருப்பேன். எனக்கும் பிறருக்கு உதவி செய்யும் எண்ணம் உண்டு. ஆனால், இன்னும் எனக்கு பணம் வந்துசேரவில்லை. வரி குறித்து இன்னும் பல தகவல்கள் தெரியவேண்டியுள்ளது. ஆகவே என்னுடைய நிலைமையை புரிந்துகொள்ளுங்கள்" என கவலையுடன் குறிப்பிட்டிருக்கிறார்.