“பரீட்சைக்கு 2 மாசத்துக்கு முன்னாடி.. திடீர்னு மாடியில் இருந்து தவறி விழுந்துட்டேன்”.. நொடியில் தலைகீழாக மாறிய வாழ்க்கை.. இளம் டாக்டரின் தன்னம்பிக்கை கதை..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமாடியில் இருந்து தவறி விழுந்ததால் கால்கள் செயலிழந்த பெண் டாக்டர் ஆன சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் மரியா. 12-ம் வகுப்பு முடித்துவிட்டு நீட் தேர்வுக்கு தயாராகியுள்ளார். நீட்டில் தேர்ச்சி பெற்று டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவோடு இருந்த மரியாவுக்கு, 2016-ம் ஆண்டு இடுக்கி மாவட்டம் தொடுபுழா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்துள்ளது.
இந்த சூழலில், கல்லூரியில் சேர்ந்த ஆறே மாதத்தில் வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து மரியா கால்தவறி கீழே விழுந்துள்ளார். இதில் அவரின் இரண்டு கால்களும் உடைந்து, கழுத்து நரம்பு முறிந்தது. கேரளாவில் பல மருத்துவமனைகளில் சிசிக்சை பெற்றுள்ளார். ஆனால் எங்கும் பலனளிக்காத நிலையில், இறுதியாக வேலூர் மிஷன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். அங்கு சுயநினைவு திரும்பிய பிறகு, சக்கர நாற்காலிதான் வாழ்க்கை மரியாவுக்கு மாறியுள்ளது.
ஆனாலும் டாக்டராகும் கனவை மரியா கைவிடவில்லை. இவரது தன்னம்பிக்கை கண்டு மறு ஆண்டில் மருத்துவக் கல்வியை தொடர தொடுபுழா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் அனுமதி அளித்தது. படித்து முடித்து, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் மாணவியாக அதிக மதிப்பெண் பெற்று மரியா அசத்தினார்.
இப்போது எர்ணாகுளத்தில் தனியார் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவருகிறார் மரியா. அங்கு சக்கரநாற்காலியில், கழுத்தில் ஸ்டெதஸ்கோப், கைகளில் மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் என பம்பரமாய் மரியா சுறுசுறுப்பாக சுழன்று வருகிறார். இந்த நிலையை எட்டுவதற்கு பட்ட சிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல என மரியாக உருக்கமாக தெரிவித்துள்ளார். கால்கள் செயலிழந்த போதிலும் தன்னம்பிக்கையுடன் போராடி டாக்டர் ஆன மரியாவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
