"அது மட்டும் நடந்திருந்தால் அவர் இன்னும் சீக்கிரமே என்னை.." .. அஸ்வினை பாராட்டிய முன்னாள் வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெஸ்ட் போட்டிகளில் தன்னுடைய சாதனையை முறியடித்துள்ள அஸ்வினுக்கு கபில்தேவ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கபில்தேவ்வின் சாதனை
இந்திய அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான அஸ்வின் சமீபத்தில் நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி விக்கெட்களை சேர்த்தார். அப்போது அவர் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரரான கபில்தேவ்வின் 435 விக்கெட்கள் சாதனையை முந்தினார். இதன்மூலம் இந்திய கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அனில் கும்ப்ளேவுக்கு அடுத்த இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
சாதனையை தாண்டிய ஜாம்பவான்கள்
இந்திய அணிக்காக முதல் முதலாக உலகக்கோப்பையை வென்று தந்த கேப்டன் கபில்தேவ். உலகின் தலை சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான கபில்தேவ் 131 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 434 விக்கெட்கள் வீழ்த்தியிருந்தார். ஒரு காலத்தில் டெஸ்ட் போட்டிகளில் இதுதான் அதிகபட்ச சாதனையாக இருந்தது. பின்னர் அதை ஷேன் வார்ன், முரளிதரன் மற்றும் கும்ப்ளே, ஆண்டர்சன் மற்றும் மெக்ராத் போன்றவர்கள் தாண்டி முன்னேறிச் சென்றனர்.
அஸ்வினின் சாதனை:
இப்போது அந்த வரிசையில் அஸ்வின், கபில்தேவ்வின் சாதனையை முறியடித்துள்ளார். கபில்தேவ் 131 போட்டிகளில் நிகழ்த்திய சாதனையை அஸ்வின் 85 போட்டிகளில் முறியடித்துள்ளார். கபில்தேவ் போலவே ஆல்ரவுண்டராக செயல்பட்ட அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் சில சதங்களையும் அடித்துள்ளார். தற்போது 35 வயதாகும் அஸ்வின் இன்னும் சில ஆண்டுகள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் பட்சத்தில் அனில் கும்ப்ளேவின் அதிகபட்ச விக்கெட் சாதனையான 619 விக்கெட்களைக் கடக்க வாய்ப்புள்ளது.
கபில்தேவ்வின் பாராட்டு
இந்நிலையில் தன்னுடைய சாதனையை முறியடித்துள்ள அஸ்வினுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார் முன்னாள் கேப்டன் கபில்தேவ். மேலும் அவர் அஸ்வின் இந்த சாதனையை சீக்கிரமே முறியடித்திருப்பார் என்றும் அவருக்கு சமீபகாலமாக சரியாக வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார். இது சம்மந்தமாக ‘அவருக்கு சமீபகாலமாக சரியாக வாய்ப்புகள் வழங்கபடவில்லை. இருந்தாலும் அவர் இந்த பெரிய சாதனையைப் படைத்துள்ளார். ஒருவேளை அப்படி நடந்திருந்தால் இன்னும் சில ஆண்டுகளுக்கு முன்னரே இந்த சாதனையை அஸ்வின் தகர்த்திருப்பார். நீண்ட நாட்களாக என்னிடம் இருந்த சாதனையை அஸ்வின் பிடித்தது மகிழ்ச்சி. அவர் 500 விக்கெட் என்ற இலக்கை வைத்துகொண்டு அதையும் தாண்டி செல்லவேண்டும். அவர் அதை செய்வார் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்’ எனக் கூறியுள்ளார்.
அஸ்வினுக்கான வாய்ப்புகள்
சமீபகாலமாக இந்திய அணி ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற வேகப்பந்துக்கு சாதகமான மைதானங்களில் இந்திய அணி விளையாடிய போது அணியில் சேர்க்கப்படாமல் உட்காரவைக்கப்பட்டார். அதனால் அவர் சில போட்டிகளில் விளையாட முடியாமல் போனது.