ஜன்னல் இடுக்குகளில் ஒட்டப்பட்டிருந்த டேப்.. காற்று வெளிய போகக் கூடாது.. வீட்டுக்குள்ள இருந்த 4 பேர்.. குடும்பத்தோடு சாப்ட்வேர் என்ஜினீயர் எடுத்த சோக முடிவு
முகப்பு > செய்திகள் > இந்தியாதிரிச்சூர்: கேரள மாநிலத்தில் வீட்டுக்குள் விஷ வாயுவை நிரப்பி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து காவல் துறையினர் தரப்பில் கூறியதாவது, 'கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடுங்கல்லூர் உழவத் கடவை சேர்ந்தவர் உபைது. இவர் மகன் ஆஷிப் (40). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருடைய மனைவி ஆசிரா (34 வயது). இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் இருந்துள்ளனர்.
நீண்ட நேரமாக திறக்கப்படாத வீடு:
குடும்பமாக நான்கு பேரும் வீட்டின் மாடியில் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்றைய தினம் காலை நீண்ட நேரமாகியும் வீடு திறக்கப்படாததால் ஆஷிப் சகோதரி மாடிக்கு சென்று கதவை தட்டினார். ஆனால் உள்ளே இருந்து எந்த தகவலும் இல்லை. இதனால் அவருக்கு பலத்த சந்தேகம் வந்தது. உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது வீட்டுக்குள் இருந்து நச்சுத்தன்மை உடைய வாயு வெளியே வந்தது. இதனால் காவல் துறையினருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனை உணர்ந்து கொண்ட போலீசார் உடனடியாக வெளியே சென்றனர்.
ஜன்னல் இடுக்குகளில் டேப்:
அதன்பிறகு, வீட்டுக்குள் விஷவாயு படர்ந்து இருப்பதை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தனர். அப்போது ஜன்னல் இடுக்குகளில் காற்று வெளியேறாதவாறு டேப் ஒட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. பின்னர் அதனையும் அகற்றி வீடு முழுவதும் பரவியிருந்த விஷ வாயுவை வெளியேற்றிய பிறகு போலீசார் வீட்டுக்குள் நுழைந்தனர்.
என்ன பிரச்சனை?
அங்கு ஒரே அறையில் ஆஷிப் உள்பட நான்கு பேரும் சடலமாக கிடந்ததை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் நான்கு பேர் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், விஷ வாயுவை வீட்டுக்குள் நிரப்பி 4 பேரும் உயிரை மாய்த்துக் கொண்டதாக தகவல் வெளியானது. கார்பன் மோனாக்சைடு என்ற விஷவாயுவை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். கடன் தொல்லை காரணமாக ஆஷிப் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்று காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.
போலீசார் விசாரணை:
மேலும் இதுகுறித்து கொடுங்கல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரே குடும்பத்தில் 4 பேர் விஷ வாயுவை சுவாசித்து உயிரை மாயய்துக்கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
(குறிப்பு: எந்த ஒரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது. மன ரீதியான அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.
மாநில உதவிமையம் : 104 .
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050