காதல் டூ கல்யாணம்.. திருவனந்தபுரம் இளம் மேயரை கரம்பிடிக்கும் இளம் எம்.எல்.ஏ.. செம்ம ஜோடி பொருத்தம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாதிருவனந்தபுரம்: மேயர் ஆர்யா ராஜேந்திரனுக்கும், கேரள சட்டப்பேரவை உறுப்பினர் சச்சின் தேவுக்கும் திருமணம் குறித்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

காதலின் புகழ் பாட விரும்பிய பாரதி, 'காதலினால் மானுடருக்குக் கவிதையுண்டாம், கானமுண்டாம், சிற்பமுதற் கலைகளுண்டாம். ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே' என்று பாடினார். காவியங்கள் அனைத்தும் காதலைப் பற்றி சுவைபடப்பேசுகின்றன. காதல் கனவுகளிலும், நினைவுகளிலும் மனது மயங்குகிறது. காதல் சுவையானது. சுமையாகத் தோன்றினாலும் அது சுகமானது. அபார சக்தி கொண்டது. அது கோழையை வீரனாக்கும். வீராதி வீரனை பசுவைப் போல் சாதுவாக்கும். ஆண்டியை அரசனாக்கும், அரசனை அடிமையாக்கும். காதலால் வாழ்வில் ஏற்றங்களும் ஏற்படலாம். ஏமாற்றங்களும் ஏற்படலாம். எனினும் காதல் அற்புதமானது.
காதல்
அதுவும் குறிப்பாக அரசியல்வாதிகளுக்குள் நடக்கும் காதல் கதைகள் மிகவும் சுவாரஸ்யமானது. காதலுக்குள் அரசியல் தேவையில்லை, புரிதல் இருந்தால் போதும். சித்தாந்தமும், இருவரது சிந்தனையும் ஒன்றாக இருந்தால் வாழ்க்கையில் இதைவிட மிகப்பெரிய அற்புதம் ஏதுமில்லை. அதே காதல் கை கூடினால் ஒவ்வொரு நாளும் கொண்டாட்டம் தான். அந்த வகையில், கேரளாவில் இளம் காதலர்கள், அரசியல்வாதிகள் தம்பதிகளாக வாழ்க்கையை தொடங்கவுள்ளனர்.
திருவனந்தபுரம் மேயர் - இளம் எம்.எல்.ஏ
திருவனந்தபுரத்தின் மேயராக இருப்பவர் ஆர்யா ராஜேந்திரன். கல்லூரி மாணவியாக இருந்த இவரை மேயராக்கி அழகு பார்த்தது மார்க்சிஸ்ட் கட்சி. இவர் கடந்த 2020ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில்வெற்றி பெற்று திருவனந்தபுரத்தின் மேயராக 21 வயதில் பதவியேற்றார். இதன்மூலம் இந்தியாவிலேயே மிகவும் குறைந்த வயதில் மேயராக பதவியேற்றவர் என்ற பெருமையை பெற்றார். இந்நிலையில், இவருக்கும், பாலுச்சேரி எம்.எல்.ஏ சச்சின் தேவுக்கும் திருமணம் நடக்க உள்ளதாக என்ற தகவல் வெளியாகி உள்ளது.
விரைவில் டும் டும் டும்
சச்சின் தேவ், கேரள சட்டப்பேரவையில் மிக இள வயது உறுப்பினர் ஆவார். இப்போது 28 வயதாகும் சச்சின் தேவ், இந்திய மாணவர் சங்கத்தில் மாநில செயலாளராக உள்ளார். எஸ்.எப்.ஐ (SFI) அமைப்பின் தேசிய இணைச் செயலாளராகவும் உள்ளார் சச்சின் தேவ். ஆர்யா ராஜேந்திரனும், சச்சின் தேவும் சிறு வயதில் இருந்தே இந்திய மாணவர் சங்கத்தில் வளர்ந்தவர்கள். அதனால் இருவருக்கு இடையிலும் நல்ல நட்பு இருக்கிறது. இதுகுறித்து சச்சின் தேவின் தந்தை நந்தகுமார் கூறியதாவது, "கொள்கைப்பிடிப்புள்ள இவர்கள், சேர்ந்து தம்பதிகளாக வாழ்வது பொருத்தமாக இருக்கும்" என்று தெரிவித்தார்.
மேலும், இருவருக்கும் திருமணம் எப்போது என்று தெரியவில்லை. எனினும் கூடிய விரையில் இரு குடும்பத்தினரும் சேர்ந்து முடிவு செய்து தேதியை அறிவிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
