'கச்சா பாதாம்' பாடலை பாடியவருக்கு ரசிகர் கொடுத்த பரிசு.."என் வாழ்க்கையில இதெல்லாம் நடக்கும்னு நெனச்சுக்கூட பார்த்ததில்ல"..நெகிழ்ந்து போய்ட்டாரு மனுஷன்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகச்சா பாதாம் பாடலை பாடியவருக்கு அவரது ரசிகர் ஒருவர் ஆப்பிள் ஐபோனை பரிசாக அளித்திருக்கிறார்.

இணையம் வளர்ந்துவிட்ட இந்த காலத்தில் கணப்பொழுதில் நம்மால் உலக விஷயங்களை தெரிந்துகொள்ள முடிகிறது. அதேபோல, உலகின் ஏதோ ஒரு மூலையில் வசிக்கும் சாதாரண நபர் கூட இணையத்தின் மூலமாக தனது தனித்திறமைகளை உலகறிய செய்ய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இப்படி எளிய பின்புலத்தில் இருந்து தங்களது வித்தியாசமான திறமைகளின் மூலம் மக்களிடையே பிரபலமானவர்களின் பட்டியல் நெடியது. அவற்றுள் ஒருவர் தான் பூபன் பத்யாகர்.
கச்சா பாதாம்
மேற்கு வங்காள மாநிலத்தில் குரல்ஜூரி எனும் கிராமத்தை சேர்ந்தவர் பூபன் பத்யாகர். இவருக்கு மனைவி , இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர். ‘வேர்க்கடலை வியாபாரம் செய்துவந்த பூபனுக்கு பாடல் பாடுவது மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. அதிலும் குறிப்பாக வியாபாரத்துக்கு செல்லும்போது இவர் பாடும் 'கச்சா பாதாம்' பாடல் அப்பகுதி மக்களால் விரும்பி கேட்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், ஒருநாள் கச்சா பாதாம் பாடலை பூபன் பாடுகையில் ஒருவர் எதேச்சையாக வீடியோ எடுத்து அதனை இணைய தளத்தில் வெளியிட, அது படு வைரலாக பரவியது.
டிக்டாக், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட அனைத்து சமூக வலை தளங்களிலும் இந்த பாடல் தீயாய் பரவியது. நடிக, நடிகையர்கள் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிடத் துவங்கினர். இப்படி மேற்கு வங்காளத்தின் ஒரு கிராமத்தில் ஒலித்த குரல், இப்போது உலகமெங்கும் ஓங்கி ஒலித்து வருகிறது. இதன் காரணமாக பூபனுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர். இந்நிலையில், பூபனின் ரசிகர் ஒருவர் அவருக்கு ஆப்பிள் ஐபோனை பரிசாக அளித்திருக்கிறார். இது இணையதளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
ஐபோன் 13
சமீபத்தில் டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றிருக்கிறார் பூபன். அப்போது அவரது ரசிகர் ஒருவர் ஐபோன் 13-ஐ பரிசாக வழங்கியிருக்கிறார். இதனால் பூபன் நெகிழ்ந்து போயிருக்கிறார். இதுகுறித்து பூபன் பேசுகையில்,"இந்த ஐபோன் எனக்குக் கொடுக்கப்பட்டதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. டெல்லியைச் சேர்ந்த ஒருவர் எனது பாடலைக் கேட்டு இதைப் பரிசளித்தார். மக்கள் என்னை ஆசீர்வதித்துள்ளனர். இப்போது நான் பரவலாக அறியப்படுகிறேன். என் வாழ்வில் இப்படி ஒரு நல்ல விஷயங்கள் நடக்கும் என்று நான் நினைத்ததே இல்லை. நான் இந்த போனில் புகைப்படங்களை எடுத்து வருகிறேன்" என்றார்.
கச்சா பாதாம் பாடல் மூலம் பிரபலமான பூபனுக்கு அவரது ரசிகர் ஒருவர் ஐபோனை பரிசளித்திருப்பது குறித்து இணையதளம் முழுவதும் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

மற்ற செய்திகள்
