‘கொரோனா’ பாதித்த பாலிவுட் ‘பாடகியுடன்’... ‘பார்ட்டியில்’ பங்கேற்ற... அரசியல், ‘சினிமா’ பிரபலங்கள் ‘கலக்கம்’... ‘பரபரப்பு’ சம்பவம்...
முகப்பு > செய்திகள் > இந்தியாபாலிவுட் பாடகி கனிகா கபூர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருடன் விருந்தில் பங்கேற்ற அரசியல், சினிமா பிரபலங்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. இதையடுத்து வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில் பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து மார்ச் 9ஆம் தேதி லண்டனில் இருந்து மும்பை திரும்பிய கனிகா கபூர் லக்னோவில் நடந்த இரவு விருந்து ஒன்றில் பங்கேற்றது தெரியவந்துள்ளது. மேலும் அந்த நிகழ்ச்சியில் அரசியல் பிரபலங்கள், சினிமா நடிகர், நடிகைகள் என 100 பேர் கலந்து கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் கனிகா தான் லண்டனில் இருந்து வந்தது குறித்து யாரிடமும் தெரிவிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
கனிகா கபூருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் பங்கேற்ற நிகழ்ச்சியில் உடன் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் வசுந்தரா ராஜேவும், அவருடைய மகன் துஷ்யந்தும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து கனிகா கபூர் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்ற அரசியல், சினிமா பிரபலங்கள் அனைவரும் கலக்கம் அடைந்துள்ளனர்.
மேலும் பயண விவரங்களை மறைத்த கனிகாவிற்கு பலரும் சமூகவலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே திரிணாமுல் காங்கிரஸ் டெரிக் ஓ பிரைன் மார்ச் 18ஆம் தேதி நடந்த நாடாளுமன்ற கூட்ட தொடரில் சக எம்பியான துஷ்யந்த்திற்கு அருகில் அமர்ந்திருந்ததால் முன்னெச்சரிக்கையாக தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளார். அதேபோல அப்னா தளம் எம்பி அனுப்பிரியா படேலும் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
