மைக் மோகன்-னு பேரே வந்துச்சு!.. எஸ்பிபி மறைவை பற்றி நடிகர் மோகன் சொன்னது என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்திரைப்பட நடிகர் மோகன் நாயகனாக நடித்த பல படங்களில் எஸ்பிபி பாடியுள்ளார். இளையராஜா - எஸ்பிபி - மோகன் மூவர் கூட்டணியில் உருவான பாடல்கள் அவை அனைத்துமே வெற்றிப் பாடல்கள். இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவை.

இந்நிலையில் எஸ்பிபி மறைவு இசை உலகின் கருப்பு தினம் என நடிகர் மோகன் உருக்கமாக பேசியுள்ளார். ஆகஸ்ட் 5-ம் தேதி கரோனா தொற்று உறுதியாகியதை அடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணிப் பாடகராக வலம் வந்த எஸ்பிபி, எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அடுத்த சில நாட்களில் உடல்நிலை மோசமடைந்ததுடன், தற்போது மாரடைப்பால் நேற்று (செப்டம்பர் 25) மதியம் 1:04 மணிக்கு எஸ்பிபி காலமானார். அவருடைய மறைவுக்குத் திரையுலகப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், நடிகர் மோகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில், "இசையுலகிற்கு இது கருப்பு தினம். 5,000-க்கும் அதிகமான பாடல்களைப் பாடி நம்மை மகிழ்வித்த பாடும் நிலா இன்று நம்மிடம் இல்லை என்பதை நம்ப முடியவில்லை. எஸ்பிபி சார் செய்த சாதனைகளை இனிமேல் யாராவது செய்ய முடியுமா என தெரியவில்லை. அவருடைய இசைப் பயணத்தில் எனக்கும் பாடல்களை பாடியுள்ளார் என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சி. முதல் பாடலிலிருந்து கடைசி பாடல் வரை அவருடைய குரல் ப்ரெஷ் ஆகவே இருந்தது. இதேபோல் எனக்குத் தெரிந்தவரை எதிரிகளே இல்லாத மனிதர் எஸ்பிபி சார்.
எண்பதுகளில் எல்லா ஹீரோக்களுக்கும் அவர் குரலே அமைந்திருக்கும், என்னுடைய படங்களிலும் அவர்தான் பாடியிருப்பார். அவர் யாருக்குப் பாடினாலும் அவர்களே பாடுவதுபோல் இருக்கும் என்பதுதான் அந்த குரலின் மேஜிக். அப்படித்தான் எனக்கும் அமைந்தது. அவர் பாடிய பல பாடல்களுக்கு நான் நடித்துள்ளேன் என்பதில் எனக்குப் பெருமை. இன்னும் பல நூறு ஆண்டுகள் ஆனாலும் அந்தக் குரல் மூலம், நம்மை எஸ்பிபி மகிழ்வித்துக்கொண்டே இருப்பார். அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அவர் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்” என மோகன் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
