பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் உடல்நிலை மோசமடைந்து வந்த நிலையில், தற்போது அவர் காலமான தகவல், ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மும்பையைச் சேர்ந்த பின்னணி பாடகியான லதா மங்கேஷ்கர், கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக, பல்வேறு மொழிகளில், சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
இவருக்கு கடந்த ஜனவரி மாதம், கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக, கடந்த சில தினங்களுக்கு முன் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, திடீரென நேற்று, லதா மங்கேஷ்கரின் உடல், மீண்டும் மோசமடைந்ததாக, மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது. வெண்டிலேட்டர் கருவிகள் பொருத்தப்பட்டு, மீண்டும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலையில் லதா மங்கேஷ்கர் உயிரிழந்துள்ளார்.
92 வயதாகும் லதா மங்கேஷ்கர், பல மொழிகளில் அதிக திரைப்பட பாடல்கள் பாடியுள்ள நிலையில், அவரது மென்மையான குரலுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இன்றைய காலத்து இளைஞர்களும் அதிகம் ரசிக்கும் லதா மங்கேஷ்கரின் பாடல்களுக்கு என்றுமே தனி சிறப்புண்டு. அப்படிப்பட்ட ஒருவரின் மறைவு, இசை பிரியர்களை கடுமையான சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
லதா மங்கேஷ்கர் உயிரிழந்த நிலையில், பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். உயிர் பிரிந்தாலும், அவரது பாடல்கள், இன்னும் பல தலைமுறை தாண்டி ரசிகர்களை ஈர்த்துக் கொண்டே தான் இருக்கும் என பலரும் வருத்தத்துடன் பதிவு செய்து வருகின்றனர்.