‘2 திரைப்படங்களில்’ இருந்து ஐடியா.. ‘உடல் எடையை’ குறைக்க சிகிச்சை.. மருந்தெனக் கூறி ‘மது’.. ‘காதலியுடன்’ சேர்ந்து அதிரவைத்த கணவர்..
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | Dec 11, 2019 11:54 AM
காதலியுடன் வாழ்வதற்காக மனைவியைக் கொலை செய்த கணவர் திரைப்படங்களைப் பார்த்தே அதற்கான ஐடியா கிடைத்ததாக அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கு முன் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்ட நிலையில் பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலத்தை கைப்பற்றிய போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இதற்கிடையே கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த பிரேம் குமார் என்பவர் தனது மனைவி வித்யா காணாமல் போயுள்ளதாகவும், அவருக்கு வேறு சில ஆண்களுடன் பழக்கம் இருந்ததாகவும் புகார் அளித்துள்ளார். ஆனால் சம்பவத்தன்று பிரேம் குமார், வித்யா இருவருடைய செல்ஃபோனும் ஒரே இடத்தில் நீண்ட நேரம் இருந்ததை அறிந்த போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
போலீஸார் எவ்வளவு விசாரித்தும் தனக்கு எதுவுமே தெரியாது எனக் கூறி நடித்துள்ளார் பிரேம் குமார். பின்னர் வித்யாவுடைய செல்ஃபோன் பீகாரில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், போலீஸாரும் உண்மையிலேயே அவர் வீட்டை விட்டு சென்றிருக்கலாம் என நினைத்துள்ளனர். அப்போது தான் வள்ளியூரில் கண்டெடுக்கப்பட்ட சடலம் வித்யாவுடையது தான் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திருவனந்தபுரத்தில் வசித்து வந்த பிரேம் குமார் மற்றும் அவருடைய காதலி சுனிதா பேபி இருவரையும் பிடித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.
வித்யா காணாமல் போவதற்கு 2 மாதங்களுக்கு முன் பிரேம் குமார் 25 வருடங்கள் கழித்து நடந்த ஒரு சந்திப்பில் தன் பள்ளித் தோழியான சுனிதா பேபியை சந்தித்துள்ளார். அப்போது சிறுவயதில் பிரிந்த அவர்கள் மீண்டும் காதலிக்கத் தொடங்கியுள்ளனர். இது வித்யாவிற்கு தெரியவர, கணவன் - மனைவி இடையே அடிக்கடி பிரச்சனை இருந்துவந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து மனைவியைக் கொலை செய்ய முடிவு செய்த பிரேம்குமார் உடல் எடையைக் குறைக்க சிகிச்சை எனக் கூறி ஏமாற்றி வித்யாவை திருவனந்தபுரத்தில் ஒரு வில்லாவிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து அவருக்கு மருந்தெனக் கூறி மதுவைக் கொடுத்த பிரேம் குமார், காதலியுடன் சேர்ந்து கழுத்தை நெரித்து அவரைக் கொலை செய்துள்ளார்.
பின்னர் வித்யாவின் உடலை காரில் ஏற்றி வந்து வள்ளியூரில் வீசிவிட்டு, அவருடைய செல்ஃபோனை திருவனந்தபுரத்திலிருந்து மும்பை செல்லும் ரயிலின் குப்பைத் தொட்டியில் வீசியுள்ளார். மேலும் விசாரணையில் திரைப்படங்களைப் பார்த்தே இதற்கான ஐடியா கிடைத்ததாகக் கூறிய பிரேம் குமார், 96 படம் பார்த்து தானும் சுனிதாவும் காதலிக்கத் தொடங்கியதாகவும், பாபநாசம் படம் பார்த்து கொலை செய்ததாகவும் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.