'டிக்கெட் கேன்சல் மூலம் அடித்த ஜாக்பாட்'... 'ரயில்வேக்கு கொட்டிய பணம் '... வெளியான பரபரப்பு தகவல்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகடந்த 3 ஆண்டுகளில் முன்பதிவு டிக்கெட்டுகளை ரத்து செய்ததன் மூலம், ரயில்வேக்கு கிடைத்துள்ள வருவாய் பலரையும் ஆச்சரியப்படச் செய்துள்ளது.
ரெயில்வேயில் நாம் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது சில நேரங்களில் அது உறுதி ஆவது இல்லை. பெரும் பாலான நேரங்களில் வெயிட்டிங் லிஸ்ட்டில் கூட இருப்பது உண்டு. அந்த வகையில், முன்பதிவு டிக்கெட்டுகளை ரத்து செய்ததன் மூலமாகவும், காத்திருப்பு (வெயிட்டிங் லிஸ்ட்) டிக்கெட்டுகளை ரத்து செய்யாமல் விட்டதன் மூலமாகவும் ரெயில்வே துறைக்கு ரூ.9 ஆயிரம் கோடி கூடுதல் வருவாய் கிடைத்து இருக்கிறது.
கடந்த 3 ஆண்டுகளில் (2017 ஜனவரி முதல் 2020 ஜனவரி வரை) 9½ கோடி பேர் காத்திருப்பு பட்டியலிலிருந்தும் டிக்கெட்டுகளை ரத்து செய்யாமல் விட்டு உள்ளனர். இதன் மூலம் சுமார் ரூ.4,335 கோடி வருவாய் கிடைத்து உள்ளது. அதேபோல், பயண டிக்கெட்டுகளை ரத்து செய்தவர்கள் மூலமாக ரூ.4,684 கோடி கிடைத்து இருக்கிறது. அதிக வருமானம் என்பது படுக்கை வசதி கொண்ட பெட்டியில் முன்பதிவு செய்தவர்களிடமும், அதைத் தொடர்ந்து 3 அடுக்கு குளிர்சாதன வகுப்பில் பயணம் செய்தவர்களிடம் இருந்தும் வந்துள்ளது.
இதற்கிடையே கடந்த 3 ஆண்டுகளில் 74 கோடி பேர் ரெயில் நிலைய கவுண்ட்டரிலும், 145 கோடி பேர் இணையதளம் வாயிலாகவும் டிக்கெட்டுகள் எடுத்து இருக்கிறார்கள். மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சுஜித் சுவாமி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டதற்கு ரெயில்வே துறை அளித்து உள்ளது.