'4 குற்றவாளிகளும்' 'தூக்கில்' போடப்பட்டனர்... 'கடைசிகட்ட' மனுக்கள் அடுத்தடுத்து 'நிராகரிப்பு'... '7 ஆண்டுகளுக்குப் பிறகு நிர்பயாவுக்கு' 'நீதி' கிடைத்ததாக தாயார் உருக்கம்...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Mar 20, 2020 06:39 AM

டெல்லியில் நிர்பயா என்ற மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேரும் டெல்லி திகார் சிறையில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டனர்.

Four Nirbhaya convicts The execution was carried out

டெல்லியில் நிர்பயா என்ற துணை மருத்துவ மாணவி கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டார். பின்னர் அவர் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங் (வயது 32), பவன் குமார் குப்தா (25), வினய் குமார் சர்மா (26), அக்‌ஷய் குமார் (31) ஆகிய 4 பேருக்கும் மரண தண்டனை விதித்து டெல்லி செஷன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் பின்னர் உறுதி செய்தன.

மரண தண்டனையில் இருந்து தப்பிக்கும் முயற்சியாக அவர்கள் 4 பேரும் ஒவ்வொருவராக மறுஆய்வு மனு, சீராய்வு மனு, கருணை மனு ஆகியவற்றை மாறி மாறி தாக்கல் செய்ததால் அவர்களை தூக்கில் போடுவது 3 முறை தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில், குற்றவாளிகள் 4 பேரின் கருணை மனுக்களும் குடியரசுத்தலைவரால் நிராகரிக்கப்பட்டு விட்டன.

இதைத்தொடர்ந்து, டெல்லி சிறைத்துறை தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி கூடுதல் செசன்சு கோர்ட்டு நீதிபதி தர்மேந்தர் ராணா கடந்த 5-ந் தேதியன்று, குற்றவாளிகள் 4 பேரையும் 20-ந் தேதி அதாவது இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிடுமாறு புதிய உத்தரவை பிறப்பித்தார்.

இந்த வாரண்டு பிறப்பிக்கப்பட்ட பிறகும், தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி, 4 பேர் தரப்பிலும் டெல்லி கூடுதல் செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி தர்மேந்தர் ராணா நேற்று தள்ளுபடி செய்தார்.

அக்‌ஷய் குமார் சிங்கின் மனைவி புனிதா தேவி நேற்று கோர்ட்டுக்கு வந்திருந்தார். அவர், தனது கணவர் அப்பாவி என்றும், தனக்கு நீதி வேண்டும் என்றும் கூறினார். அத்துடன், கணவருடன் தன்னையும், தனது மகனையும் சேர்த்து தூக்கில் போட வேண்டும் என்று கோரி கதறி அழுததால் மயங்கி விழுந்தார்.

குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ரோகின்டன் பாலி நாரிமன், ஆர்.பானுமதி, அசோக் பூஷண், ஏ.எஸ்.போபண்ணா ஆகிய 6 நீதிபதிகள் அடங்கிய அமர்வு நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதேபோல் இந்த வழக்கில் சாட்சிகளை மீண்டும் வரவழைத்து மறுவிசாரணை செய்ய வேண்டும் என்று கோரி முகேஷ் குமார் சிங் தாக்கல் செய்த மனுவையும், தன்னுடைய கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக அக்‌ஷய் குமார் சிங் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவையும் உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.பானுமதி தலைமையிலான அமர்வு நேற்று தள்ளுபடி செய்தது.

பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்த நாளில் தான் டெல்லியில் இல்லை என்று கூறி தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம்  தள்ளுபடி செய்ததை எதிர்த்து முகேஷ் குமார் சிங் உச்சநீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீடு செய்தார். அந்த மனுவும் தள்ளுபடி ஆனது.

குற்றவாளிகள் தரப்பில் சர்வதேச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு இதுவரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

இந்நிலையில் நிர்பயா வழக்கில், தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி, குற்றவாளிகள் 4 பேரும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை இறுதிவாய்ப்பாக முறையீடு செய்தார்கள். அவர்களின் இறுதி மனுக்களும் அடுத்தடுத்து நள்ளிரவு தள்ளபடி செய்யப்பட்டன.

இதன் மூலம் நிர்பயா வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நால்வருக்கும் தனித்தனியே அவர்களுக்கான தூக்கு மேடையில் இன்று காலை 5.30 மணிக்கு டெல்லி திகார் சிறையில் தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டது.

நான்கு பேருடைய உடலும் அரை மணி நேரம் தூக்கு மேடையில் தொங்கவிடப்பட்டன. அவர்களின் உயிர் பிரிந்து விட்டது என சிறை மருத்துவர் பரிந்துரை செய்த பின்னர் உடல் தூக்கு மேடையிலிருந்து இறக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

7 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளிகள் தூக்கில் போடப்படுவதால் தனது மகளின் ஆன்மா சாந்தி அடையும் என்று நிர்பயாவின் தாயார் கூறி உள்ளார்.

Tags : #NIRBHAYA #DELHI #TIHAR JAIL #SUPREME COURT #4 CONVICT #EXCUTION #HANGING