'இவர யாருன்னு தெரியுதா'?...'எப்படி காசு பணத்தோட வாழ்ந்த மனுஷன்'... 'ஆனா 10 வருஷமா ரோட்டில்'... நொறுங்கி போன அதிகாரிகள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகாலம் சில நேரங்களில் பலரது வாழ்க்கையை தலைகீழாகப் புரட்டிப் போட்டு விடுகிறது. காசு பணத்தோடு உயரத்திலிருந்தாலும் ஒரு நொடியில் அவர்களது வாழ்க்கை மாறி விடுகிறது. அதுபோன்ற ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது.

மத்திய பிரேதச மாநிலத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகளான ரத்னேஷ் சிங் மற்றும் விஜய் படோரியா ஆகிய இருவரும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது சாலையில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த நபரைப் பார்த்த இருவரும், அவரை பார்ப்பதற்கே பாவமாக இருக்கிறது என உணவு மற்றும் உடைகளை வாங்கி கொடுத்துள்ளார்கள். அந்த பிச்சைக்காரரைப் பார்க்கும் போது முகம் முழுவதும் தாடியுடனும், அழுக்கு உடையுடனும் இருந்துள்ளார்.
ஆனாலும் அவரது முகத்தில் ஏதோ ஒரு கம்பீரம் இருப்பதை இரு காவல்துறை அதிகாரிகளும் பார்த்துள்ளார்கள். பின்னர் அந்த இடத்தை விட்டு இரு காவல்துறை அதிகாரிகளும் செல்ல தயாரான நிலையில், தங்களின் பெயரைச் சொல்லி அழைக்கும் சத்தம் கேட்டது. யார் என பின்னால் திரும்பிப் பார்த்த அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. சிறிது நேரத்திற்கு முன்பு பார்ப்பதற்குப் பாவமாக இருக்கிறது என யாருக்கு உணவும், உடையும் வாங்கி கொடுத்தார்களோ அந்த பிச்சைக்காரர் தான் இருவரின் பெயரைச் சொல்லி அழைத்துள்ளார்.
உடனே அவரிடம் சென்ற இரு காவல்துறை அதிகாரிகளும், நீங்கள் யார், எங்கள் இருவரின் பெயர் உங்களுக்கு எப்படித் தெரியும் எனக் கேட்டுள்ளார்கள். அப்போது முகத்தில் தாடியுடனும், அழுக்கான உடையிலும் இருந்த நபர் கூறிய தகவல் இரு காவல்துறை அதிகாரிகளின் மனதைச் சுக்கு நூறாக நொறுங்கிப் போகச் செய்தது. அவர் காவல்துறையில் அதிகாரியாக பணியாற்றிய மனிஷ் மிஸ்ரா என்பதும், அவர் அதிகாரியாக பணியாற்றிய காலத்தில் காவல்துறையையே ஒரு கலக்கு கலக்கியவர் என்பதும் தெரிய வந்தது.
ரத்னேஷ் சிங் மற்றும் விஜய் படோரியா ஆகிய இருவரும் மேலும் அதிர்ச்சி அடைய முக்கிய காரணம் என்னவென்றால், அவர்கள் இருவரும் மனிஷ் மிஸ்ராவின் கீழ் பணியாற்றிய அதிகாரிகள். துப்பாக்கி சுடுவதில் வல்லவரான மனிஷ் மிஸ்ரா நேர்மையான அதிகாரி எனப் பெயர் எடுத்தவர் என்பதோடு, நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். அதோடு நல்ல செல்வச் செழிப்போடு வாழ்ந்த நபர்.
சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்ட மனிஷ் மிஸ்ரா இப்படி சாலையில் சுற்றித் திரிந்துள்ளார். அவரின் குடும்பத்தினர் ஏன் அவரை கவனிக்கவில்லை என்பது குறித்த தகவல் எதுவும் இல்லை. இதையடுத்து மனிஷ் மிஸ்ராவை சிகிச்சைக்காக, ரத்னேஷ் சிங்கும், விஜய் படோரியாவும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். ஏற்கனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மனிஷ், சிகிச்சையிலிருந்து தப்பி வந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
