கொரோனாவிலிருந்து மெல்ல 'மீளும்' இந்தியா?... பாதிப்பு அதிகரித்தாலும் 'நம்பிக்கை' தரும் எண்ணிக்கை!...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | May 13, 2020 11:11 AM

இந்தியாவில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் நாட்கள் அதிகரித்து வருவது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

Coronavirus Cases Doubling Time Slows Down To 12.2 Days From 10.9

இந்தியாவில் கொரோனா பாதிப்பு  எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தாலும், பாதிப்பு இரட்டிப்பாகும் காலம் 10.9 நாட்களில் இருந்து 12.2 நாட்களாக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். இதுகுறித்துப் பேசியுள்ள அவர், "கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,604 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதன் மூலம் நாட்டின் மொத்த பாதிப்பு 70,756 ஆக உயர்ந்துள்ளது. இதில் 22,455 பேர் குணமடைந்துள்ளனர். 2,293 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவின் உயிரிழப்பு விகிதம் 3.2 சதவீதமாகவும், குணமடைபவர்கள் விகிதம் 31.74 சதவீதமாகவும் உள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பு விகிதம் மெல்ல உயர்ந்து வந்த நிலையில், மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு அதிகரித்ததால் இடையில் சற்று நிலைமை மாறியது. இருப்பினும் தீவிர நடவடிக்கைகளால் தற்போது நிலைமை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு இரட்டிப்பாக்கும் காலம் 10.9 நாட்களில் இருந்து தற்போது 12.2 நாட்களாக அதிகரித்துள்ளது.

கண்காணிப்பு, பரிசோதனை, தொடர்புகளை கண்டறிதல், சரியான நேரத்தில் சிகிச்சை ஆகியவற்றை இன்னும் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும். சொந்த ஊர் திரும்பிய அனைவரும் கட்டாயமாக ஆரோக்கிய சேது செயலியை மொபைலில் வைத்திருக்க வேண்டும். அத்துடன் சுவாசக் கோளாறு, இன்ப்ளூயன்சா போன்ற பாதிப்புகள் இருந்தால் கண்காணிப்பின் மூலம் தொடக்க நிலையிலேயே சிகிச்சை அளித்து கட்டுப்படுத்தி விடலாம்" எனத் தெரிவித்துள்ளார்.