ரயிலில் பயணம் செய்வது எப்படி?.. அனைத்தையும் புரட்டிப் போட்ட கொரோனா!.. வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manishankar | May 12, 2020 07:07 PM

சிறப்பு ரெயிலில் என்னென்ன பொருட்கள் கிடைக்கும், என்னென்ன பொருட்கள் கிடைக்காது என்றும், கூடுதல் அறிவுரைகளையும் ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டது.

centre announces new guidelines for train travel amid lockdown

கொரோனா பாதிப்பின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் சிறப்பு ரெயில் சேவை தொடங்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது.

இந்த சிறப்பு ரெயில்களில் பயணம் செய்ய இணையதள முகவரியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்றும், பயணிகள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும் எனவும் ரெயில்வே அறிவித்தது. மேலும் ரெயில் நிலையத்தில் பரிசோதனை நடத்தப்படும் என்றும், நோய்த்தொற்று இல்லாதவர்கள் மட்டுமே ரெயிலில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் சிறப்பு ரெயிலில் என்னென்ன பொருட்கள் கிடைக்கும், என்னென்ன பொருட்கள் கிடைக்காது என்றும், கூடுதல் அறிவுரைகளையும் ரெயில்வே நிர்வாகம் நேற்று வெளியிட்டது.

அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அறிவுரைகள் பின்வருமாறு:-

1. அதிகபட்சமாக 7 நாட்களுக்கு முன்பு வரை ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

2. ரெயில் புறப்படுவதற்கு 24 மணி நேரம் முன்பு வரை டிக்கெட்டை ரத்து செய்ய அனுமதிக்கப்படும். டிக்கெட்டை ரத்து செய்தால் 50 சதவீத கட்டணம் பிடித்தம் செய்யப்படும்.

3. மருத்துவ பரிசோதனைகள் செய்வதற்கு ஏதுவாக, பயணிகள் ரெயில் புறப்படுவதற்கு 90 நிமிடங்களுக்கு முன்பே ரெயில் நிலையத்துக்கு வந்துவிட வேண்டும்.

4. தற்போது இயக்கப்படும் சிறப்பு ரெயில்களின் அனைத்து பெட்டிகளும் குளிர்சாதன வசதி கொண்டவையாக இருக்கும். இதனால் ராஜ்தானி விரைவு ரெயிலின் கட்டணம் இதற்குப் பொருந்தும்.

5. ரெயிலில் பயணிக்கும்போது சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும். ரெயில் நிலையங்களிலும், ரெயிலிலும் கை கழுவ சானிடைசர் திரவம் வழங்கப்படும்.

6. பயணிகள் செல்லும் மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களில், அங்கு பரிந்துரைக்கப்படும் சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

7. குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளில் வழங்கப்படும் போர்வை மற்றும் பிற பொருட்கள் தரப்படமாட்டாது. அதனால் பயணிகள் அனைவரும் தங்களுக்குத் தேவையான பொருட்களை எடுத்து வர வேண்டும். சாப்பிடத் தயாராக இருக்கும் பார்சல் உணவுகள் மற்றும் குடிநீர் வழங்கப்படும்.

இவ்வாறு இந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது.