'காசு மட்டும் குடுத்தா போதும்' ... 'அழகான பொண்ணுங்கள சந்திக்கலாம்' ... ஆசை வார்த்தையால் வீழ்ந்த பாதுகாப்பு படை வீரர்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅழகான பெண்களை சந்திக்க வைப்பதாக கூறி மத்திய பாதுகாப்பு படை வீரரிடம் சுமார் 11 லட்சம் வரை மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

மும்பை மஜ்காவ் டாக்யார்டு பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரராக ஒருவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த டிசம்பர் மாதம் முகநூல் மூலமாக 'மேக் மை பிரண்ட்' என்ற வலைத்தள பக்கம் குறித்து அறிந்து கொண்டார். அந்த பக்கத்தில் பெயரைப் பதிவு செய்வதன் மூலம் அழகான பெண்களுக்கான நெருங்கி பழகலாம் என அந்த பக்கத்தில் கூறப்பட்டு இருந்தது. இதனால் அந்த பக்கத்தில் தனது பெயர் மற்றும் செல்போன் உட்பட தனது சுய தகவலைக் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், அடுத்தநாள் பெண் ஒருவர் தொடர்பு கொண்டு பாதுகாப்பு படை வீரருடன் பேசியுள்ளார். மேலும் 'மேக் மை பிரண்ட்' என்ற பக்கத்தின் உறுப்பினராக 920 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் என கூற பாதுகாப்பு படை வீரரும் கட்டணத்தை செலுத்தியுள்ளார். இதையடுத்து வேறொரு பெண் வீரருக்கு அழைத்து சில அழகான பெண்களை குறித்து கூறி அவர்களை சந்திக்க வேண்டும் என்றால் இருபதாயிரம் ரூபாய் சேவை கட்டணமாக செலுத்துமாறு கூறியுள்ளார். பாதுகாப்பு படை வீரரும் அந்த பணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தியுள்ளார். இதன்பிறகு சில பெண்களின் செல்போன் நம்பர்கள் படை வீரருக்கு கிடைத்துள்ளது.அதில் ஒரு பெண்ணை தேர்வு செய்து அந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்து வந்தார். அந்த பெண்ணும் பல்வேறு காரணங்கள் கூறி வீரரிடம் பணத்தை பறித்துள்ளார். இப்படியாக மொத்தம் 17 நாட்களில் அந்த கும்பல் பாதுகாப்பு படை வீரரிடம் சுமார் 11 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளது.
இறுதியில் எந்த பெண்களும் தன்னை சந்திக்க வராத நிலையில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாதுகாப்பு படை வீரர் போலீசாரிடம் புகாரளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரரை ஏமாற்றி பணமோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
