'கால் பண்ணுனா சப்ளை பண்ணுவோம்'...'சென்னை'ல ஐடி ஏரியா தான் டார்கெட்'...அதிரவைத்த ஐடி ஊழியர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Nov 13, 2019 09:37 AM

இருசக்கரவாகனத்தில் ஐடி ஊழியர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த மூன்று பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர். இதற்கு மூளையாக செயல்பட்ட ஐடி ஊழியரை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

3 Men arrested in Chennai for supplying weed to IT Employees

சென்னையில் ஒரு சில பகுதிகளில் தான் கஞ்சா விற்பனை நடக்கிறது என்ற நிலை மாறி, தற்போது டிப் டாப் உடை அணிந்த படித்த இளைஞர்கள் இந்த செயலில் ஈடுபடுவது பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. சென்னையில் ஐடி ஊழியர்கள் அதிகம் வசிப்பது தரமணி, துரைப்பாக்கம், வேளச்சேரி மற்றும் சோழிங்கநல்லூர். இந்த பகுதியில் இருக்கும் ஐடி ஊழியர்களுக்கு ஒரு கும்பல் கஞ்சா விற்பனை செய்து வருவதாகவும், அதுவும் வீட்டிற்கே சென்று டோர் டெலிவரி செய்வதாகவும் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து இந்த கும்பலை பிடிக்க காவல்துறையினர் வியூகங்களை வகுத்தனர். அதன்படி கஞ்சா கும்பலின் செல்போன் எண்ணை கண்டுபிடித்து தொடர்பு கொண்ட தனிப்படை போலீசார். எங்களுக்கு கஞ்சா தேவை என வாடிக்கையாளர் போல கேட்டனர். ஆனால் எதிர்முனையில் பேசிய நபர், தவறான எண்ணிற்கு அழைத்திருப்பதாக கூறி தொடர்பை துண்டித்துள்ளார். அதன்பிறகு தான் அந்த கும்பலிடம் இருந்து கஞ்சா வாங்கிய நபர் கொடுத்த தகவல் காவல்துறையினருக்கு உதவியாக அமைந்தது.

கஞ்சா வேண்டுமென்றால் அதற்கென இருக்கும் ரகசிய வார்த்தையை கூற வேண்டும் என்பதை அறிந்த காவல்துறையினர், மீண்டும் தொடர்பு கொண்டு அந்த வார்த்தையை சொன்னதும் எவ்வளவு கஞ்சா வேண்டும் என கேட்டுள்ளனர். அதற்கு தனிப்படை போலீசார் 100 பொட்டலம் என கூற, அதற்கு 30ஆயிரம் என விலை கூறியுள்ளார். இதையடுத்து எதிர்முனையில் பேசிய நபர், கோட்டூர்புரம், மத்திய கைலாஷ் என வரவழைத்து இறுதியாக சோழிங்கநல்லூரில் வந்து பொட்டலத்தை கொடுத்து விட்டு பணத்தை பெற்று கொண்டு சென்றுள்ளார்.

இதனிடையே அந்த பகுதியில் சாதாரண உடையில் இருந்த காவல்துறையினர், பொட்டலத்தை கொடுத்துவிட்டு சென்ற நபரை பின்தொடர்ந்து சென்றனர். அந்த நபர் இரு சக்கர வாகனத்தில் தரமணி பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள ஒரு வீட்டிற்குள் செல்ல, பின்தொடர்ந்து சென்ற காவல்துறையினர் அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்தனர். அப்போது அங்கு கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சியில் உறைய செய்தது. வீட்டிற்குள்  எடை போடும் எந்திரத்தில் வைத்து கஞ்சா பொட்டலம் போட்டு கொண்டிருந்த 3 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

அரவிந்த், கமலக்கண்ணன் மற்றும் லிண்டன் டோனி என சிக்கிய 3 பேரில் அரவிந்த் ஐஐடி ஆராய்ச்சி மையத்தில் பணிபுரியும் ஊழியர், கமலக்கண்ணன் டைடல் பார்க்கில் பணிபுரியும் ஐடி ஊழியர் என்ற தகவல் தெரிந்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். ஐஐடி ஊழியர் அரவிந்த் வீட்டில் வைத்து தான் கஞ்சா பொட்டலம் போட்டு விற்று வந்துள்ளனர். ஐடி ஊழியரான கமலக்கண்ணன் மூலம் அந்த பகுதியில் உள்ள ஐடி ஊழியர் பலருக்கும் சப்ளை செய்து வந்துள்ளனர். தண்ணீர் கேன் சப்ளை செய்யும் வேலை பார்க்கும் லிண்டன் டோனி தான் கஞ்சாவை டோர் டெலிவரி செய்து வந்துள்ளார்.

இவர்கள் சேர்ந்து ஒரு ரகசிய வார்த்தையை உருவாக்கி அதனை, கமலக்கண்ணனுக்கு தெரிந்த ஐடி துறையில் உள்ளவர்களுக்கு தெரிவிக்க கஞ்சா தேவைப்படும் ஐடி ஊழியர்கள் இதன் மூலம் கஞ்சாவை பெற்று வந்துள்ளார்கள். இந்த கும்பல் சென்னை முழுவதும் வார இறுதி நாட்களில் நடக்கும் பார்ட்டிகளுக்கும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் சப்ளை செய்து வந்துள்ளனர். இந்த கும்பலின் பின்னல் பெரிய கும்பல் இருக்கலாம் என கோணத்தில் காவல்துறையினர் விசாரனையை துரிதப்படுத்தியுள்ளார்கள்.

Tags : #TAMILNADUPOLICE #IT #CHENNAI #IT EMPLOYEES #WEED