'கொரோனா' பாதிப்புக்கு முன்பே... 'புதிய' ஊழியர்களை குறைத்த டாப் 5 'ஐடி' நிறுவனங்கள்... 'என்ன' காரணம்?...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | May 12, 2020 11:43 AM

இந்தியாவிலுள்ள ஐடி நிறுவனங்கள் புதிதாக ஊழியர்களை பணியமர்த்துவதை குறைத்துள்ளன.

IT TCS Infosys HCL Wipro Tech Mahindra Hired 25% Fewer Employees

இந்தியாவின் ஐந்து மிகப்பெரிய ஐடி நிறுவனங்கள் கொரோனா பாதிப்புக்கு முன்பே புதிய ஊழியர்களை பணியமர்த்துவதை கடுமையாக குறைத்துள்ளன. கடந்த நிதியாண்டில் அதிகபட்சமாக டெக் மகிந்த்ராவின் பணியமர்த்தல் விகிதம் 49.80 சதவீதம் சரிந்துள்ளது. அடுத்தபடியாக இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பணியமர்த்தல் விகிதம் 40.67 சதவீதமும், ஹெச்.சி.எல் நிறுவனத்தின் பணியமர்த்தல் விகிதம் 28.20 சதவீதமும், டிசிஎஸ் நிறுவனத்தின் பணியமர்த்தல் விகிதம் 17.45 சதவீதமும், விப்ரோ நிறுவனத்தின் பணியமர்த்தல் விகிதம் 0.36 சதவீதமும் சரிந்துள்ளன.

ஒட்டுமொத்தமாக இந்தியாவின் ஐந்து மிகப்பெரிய ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், ஹெச்.சி.எல், விப்ரோ, இன்ஃபோசிஸ், டெக் மகிந்த்ரா ஆகியவை முந்தைய நிதியாண்டில் 87,060 ஊழியர்கள் பணியமர்த்தியுள்ள நிலையில், கடந்த நிதியாண்டில் 66,500 புதிய ஊழியர்களை மட்டுமே பணியமர்த்தியுள்ளன. இதில் விப்ரோ நிறுவனம் மட்டுமே புதிதாக ஊழியர்களை பணியமர்த்துவதை பெரிதாக குறைக்கவில்லை. இருப்பினும் சில ஊழியர்கள் சம்பளம் இல்லாமல் விடுப்பில் அனுப்பப்படலாம் என நான்காம் காலாண்டில் அந்நிறுவனமும் தெரிவித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஊழியர்கள் பணியமர்த்தப்படுவது குறைந்ததற்கு கொரோனா பாதிப்பு மட்டுமே காரணமில்லை எனக் கூறும் வல்லுநர்கள், இந்தியாவில் கொரோனா வைரஸ் மார்ச் மாதத்தில்தான் பரவத் தொடங்கியது எனவும், ஆட்டோமேஷன், செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்பங்களின் விளைவாக ஊழியர்கள் செய்யக்கூடிய பல்வேறு வேலைகள் ஆட்டோமேஷன் முறையில் செய்யப்படுவதாலேயே ஊழியர்கள் பணியமர்த்தப்படுவது குறைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.