'குடும்பத்தோடு தவிப்பு'... '21 ஆயிரம் கிமீ, 30 மணி நேர பயணம்'.... சென்னைக்கு பறந்த 'ஏர்ஆம்புலன்ஸ்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தென் ஆப்பிரிக்காவில் இருந்து சிகிச்சைக்காக 30 மணிநேரம் ஏர்ஆம்புலன்சில் பறந்து சென்னை வந்த வங்கி அதிகாரி, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தென் ஆப்பிரிக்கா ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள ஒரு வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வருபவர் விஜய்யாசம். ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த இவர் கடந்த சில நாட்களாக புற்று நோயினால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து இந்தியா வர எண்ணிய அவரால் வர முடியாமல் போனது. தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால், விமான சேவை அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், தென் ஆப்பிரிக்காவில் குடும்பத்துடன் தவித்து வந்துள்ளார்.
இதையடுத்து வங்கி அதிகாரிகள் முயற்சியால் சிகிச்சைக்காக அவரை இந்தியாவுக்கு ஏர்ஆம்புலன்ஸ் விமானத்தில் அழைத்து வர மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து பெங்களூருவில் உள்ள நிறுவனத்தின் மூலமாக ஏர்ஆம்புலன்ஸ் தென் ஆப்பிரிக்காவுக்கு நேற்று முன்தினம் சென்றது. அங்கிருந்து விஜய்யாசம் மற்றும் அவரின் குடும்பத்தினர், அவர்களுடன் ஒரு டாக்டர், மருத்துவ உதவியாளர் ஆகியோருடன் 2 விமானிகள் ஏர்ஆம்புலன்சை இயக்கினார்கள்.
தென் ஆப்பிரிக்காவில் இருந்து கிளப்பிய விமானம், மொரிசியஸ் நாட்டுக்கு சென்று எரிபொருள் நிரப்பி கொண்டு மாலத்தீவு வழியாக சென்னைக்கு நேற்று மாலை 6 மணிக்கு வந்து சேர்ந்தது. பின்னர் வங்கி அதிகாரி சென்னையில் உள்ள பிரபல ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மொத்தம் 21 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை 30 மணி நேரம் பறந்து 7 நாடுகள் வழியாக சென்னைக்கு ஏர்ஆம்புலன்ஸ் வந்தது. முதல் முறையாக மிக நீண்ட தூரம் பயணித்த ஏர்ஆம்புலன்ஸ் இது தான் என கூறப்பட்டுள்ளது.