'ஓ... இனிமே இப்படித்தான் இருக்கப்போகுதா!?' மாற்றி அமைக்கப்படும் பேருந்து இருக்கைகள்!.. ஊரடங்கு தளர்வுக்கு தயாராகிறதா அரசு?
முகப்பு > செய்திகள் > இந்தியாஆந்திராவில் தனிமனித இடைவெளியுடன் பேருந்து இருக்கைகள் அமைக்கப்பட்டு பேருந்துகள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன.
ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் பேருந்து போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மே17ம் தேதிக்கு பிறகு தனிமனித இடைவெளியைக் கடைபிடித்து பேருந்து சேவைகள் தொடங்கப்படலாம் எனத் தெரிகிறது. கொரோனா பாதித்த இடங்களின் நிலைமையைப் பொருத்து பேருந்து சேவை தொடங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால், ஆந்திராவில் தனிமனித இடைவெளியுடன் பேருந்து இருக்கைகள் அமைக்கப்பட்டு பேருந்துகள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன.
இதில், முதல்கட்டமாக 100 சொகுசு பேருந்துகளில் இருக்கைகள் மாற்றப்பட்ட இடைவெளியுடன் 3 வரிசைகளாக இருக்கைகள் அமைக்கப்படுகின்றன. இதன் மூலம் 36 இருக்கைகள் கொண்ட பேருந்தில் தற்போது 26 இருக்கைகள் உள்ளன. இந்த திட்ட வடிவம் மற்றும் மாதிரி புகைப்படங்கள் ஆந்திர முதல்வருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவரது முடிவுக்கு ஏற்ப அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஆந்திர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த பேருந்துகளுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், இதனால் பணமில்லா பரிவர்த்தனை நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. மே18க்குள் 100 பேருந்துகள் மாற்றி அமைக்கப்பட்டு தயார் நிலையில் இருக்குமென்றும், மத்திய அரசின் உத்தரவுக்கு ஏற்ப அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆந்திர அரசு முடிவு எடுக்கும் என்றும் தெரிகிறது.