'தன்னை உருமாற்றிக் கொள்ளும் கொரோனா...' 'தடுப்பு மருந்துகள்' பலனளிக்காமல் போகலாம்... 'ஆய்வாளர்கள் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்...'
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் தன்னை உருமாற்றிக் கொள்ளத் தொடங்கியுள்ளதால் தடுப்பு மருந்துகள் பலனளிக்காமல் போகலாம் என ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மனித உடலுக்குள் நுழையும் கொரோனா வைரஸ், ஸ்பைக் என்று அழைக்கப்படும் கொக்கி போன்ற புரதத்தின் மூலம் மனித செல்களோடு இணைகிறது. இந்த இணைவு வெற்றிகரமாக நடந்தவுடன், வைரஸ் தனது மரபணுவை மனித செல்களுக்குள் புகுத்தும். அதன் பிறகு அந்த செல்லை வைரசின் இனப்பெருக்க தளமாக மாற்றுகிறது. இப்போது பாதிக்கப்பட்ட செல், வைரசை உருவாக்கும் ஒரு தளமாக மாறி உடலின் மற்றசெல்களுக்கு பல்கிப்பெருகி பரவுகிறது.
இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. வைரசுக்கு எதிராக ஒருவரின் உடலுக்குள் செலுத்தப்படும் தடுப்பு மருந்து, வைரசின் ஸ்பைக் புரதம் குறித் தகவலை உடலுக்கு அளிக்கிறது. அதனால், தடுப்பு மருந்து செலுத்தப்பட்டவர்களின் உடலுக்குள் வைரஸ் நுழையும் போது ஸ்பைக் புரதத்தை அடையாளம் கண்டு அது செல்களுடன் இணைவதைக் கட்டுப்படுத்துகிறது. ஆனால், கொரோனா வைரசின் இந்த ஸ்பைக் புரதம் தன்னை உருமாற்றிக்கொள்வதாக தற்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்
உலகம் முழுவதும், 62 நாடுகளில் 5,349 கொரோனா மாதிரிகளை சோதனை செய்த விஞ்ஞானிகள் அதன் மரபணுவில் இரண்டு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதையும், இதன் காரணமாக ஸ்பைக் புரதம் தன்னை உருமாற்றிக்கொண்டுள்ளதையும் கண்டுபிடித்துள்ளனர்.
கொரோனா வைரசின் ஸ்பைக் புரதத்தின் தற்போதைய வடிவத்தின் அடிப்படையிலேயே உலகம் முழுவதும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ஸ்பைக் புரதம் தன்னை உருமாற்றிக்கொள்வது, அந்த தடுப்பு மருந்துகளை பயனற்றதாக மாற்றி விடும் என்று விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
