'2024 டார்கெட்'!.. "பாஜகவுக்கு எதிராக கூட்டணியில்... 'அவங்க' இல்லாம எப்படி"?.. வியூகம் அமைத்து காய் நகர்த்தும் சரத் பவார்!
முகப்பு > செய்திகள் > இந்தியாதேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். மராட்டிய மாநிலத்தில், சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசில், காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் இணைந்து பங்கேற்றுள்ளன.

அந்த வகையில், 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்க சரத்பவார் விரும்புகிறார். இதற்காக காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளை அணி திரட்டி வருகிறார். இதுதொடர்பாக தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோருடன் சமீபத்தில் அவர் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், சரத்பவார் டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தை கூட்டினார். காங்கிரஸ் கட்சி சார்பில் யாரும் அந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
அதில், முன்னாள் மத்திய நிதி மந்திரி யஷ்வந்த் சின்கா (திரிணாமுல் காங்கிரஸ்), பரூக் அப்துல்லா (தேசிய மாநாட்டு கட்சி), கான்ஷ்யாம் திவாரி (சமாஜ்வாடி), ஜெயந்த் சவுத்ரி (ராஷ்டிரீய லோக்தளம்), சுசில் குப்தா (ஆம் ஆத்மி), பினாய் விஸ்வம் (இந்திய கம்யூனிஸ்டு கட்சி), நிலோத்பல் பாசு (மார்க்சி்ஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி) ஆகியோர் கலந்து கொண்டனர். தேசியவாத காங்கிரஸ் சார்பில் சரத்பவாரும் பங்கேற்றார்.
காங்கிரசில் இருந்து விலகிய சஞ்சய் ஜா, ஐக்கிய ஜனதாதளத்தில் இருந்து விலகிய பவன் வர்மா ஆகியோரும் கலந்து கொண்டனர். ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.பி.ஷா, கவிஞர் ஜாவேத் அக்தர், கே.சி.சிங் ஆகிய பிரபலங்களும் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், பாஜகவுக்கு எதிராக 3-வது அணி அமைப்பது பற்றி பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து நிருபர்களிடம் பேசிய சரத் பவார் பேசுகையில், "தற்போது, விவசாயிகள் டெல்லியின் எல்லையில் போராடி வருகின்றனர். போராட்டம் அரசியலற்றது. எனினும், இது விவசாயத்துடன் தொடர்புடையது என்று நாங்கள் நினைத்தோம். ஆலோசனை கூட்டத்தின் நோக்கம் ஒன்றாக இணைந்து எவ்வாறு உதவ முடியும் என்பதை விவாதிப்பதே ஆகும். நாடாளுமன்றத்தில் பிரச்சினைகளை எழுப்பி, மத்திய அரசுக்கு பரிந்துரைகளை வழங்குவதன் மூலம் விவசாயிகளுக்கு உதவ முடியும்.
ஒரு வெள்ளை அறிக்கை கொண்டு வந்து விவசாய துறை தொடர்பான பிரச்சினைகளை மத்திய அரசின் முன்வைப்பதாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.
காங்கிரசைத் தவிர்த்து பாஜகவுக்கு எதிரான வலுவான கூட்டணியை அமைக்க முடியாது. காங்கிரஸ் கட்சி இணைந்தால் மட்டுமே, பாரதிய ஜனதாவுக்கு எதிரான வலுவான எதிர்க்கட்சிக் கூட்டணியை அமைக்க முடியும். இது குறித்து எந்த விவாதமும் நடைபெறவில்லை" எனக் கூறினார்.

மற்ற செய்திகள்
