'கூரை வீடு!.. கூலி வேலை செய்து... குடும்பத்தை காப்பாற்றும் மனைவி'!.. தமிழக சட்டமன்றுத்துக்குள் நுழையும்... இந்த அபூர்வ அரசியல்வாதி யார்?
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருத்துறைப்பூண்டியில் அதிமுக வேட்பாளர் சுரேஷ்குமாரை 30,058 வாக்குகள் வித்தியாசத்தில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் மாரிமுத்து வெற்றி பெற்றுள்ளார்.

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் பெரும்பான்மையானவர்கள் கோடீஸ்வரர்கள். பண பலமும், வலிமையான சமூகப் பின்னணியும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
அவர்களுக்கு மத்தியில் இப்படியும் அரசியல்வாதிகள் இருக்கிறார்களா என்று வியக்க வைப்பவர்கள் ஒரு சிலர் மட்டும் தான். அப்படி ஒருவர்தான் திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக போட்டியிடும் க.மாரிமுத்து.
திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக போட்டியிடும் க.மாரிமுத்துவின் வீடு பெரிய வசதிகளற்ற கூரை வீடு. திருத்துறைப்பூண்டியில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காடுவாகுடி கிராமத்தில் உள்ளது இந்த வீடு. சிமெண்ட் பூச்சு காணாத எளிமையான வீடு. இதுதான் நடப்பு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர் ஒருவரின் இல்லம் என்பது காண்போரை ஒரு நிமிடம் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் உள்ளது.
மாரிமுத்துவின் மனைவி ஜெயசுதா, தனது கணவர் மக்களுக்காக போராடும் நிலையில், தானும், மாமியாருமாக கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருதாக கூறினார். 49 வயதாகும் மாரிமுத்து, 25 ஆண்டுகளாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இயங்கி வருபவர். எளிய அடித்தட்டு மக்களுக்கான போராட்டங்களை முன்னெடுத்து வந்ததே இவரை வேட்பாளராகவும் அறிவிக்க வைத்தது.
மாரிமுத்து தனது வேட்பு மனுவில், 3 ஆயிரம் ரூபாய் பணம் கையிருப்பு, வங்கிக்கணக்கில் 58 ஆயிரம் ரூபாய் பணம், மனைவியின் கையில் ஆயிரம் ரூபாய் பணம், மனைவியின் 3 பவுன் நகைகளை சொத்து மதிப்பாக குறிப்பிட்டு இருந்தது அனைவரிடமும் பெரும் கவனத்தை பெற்றது. பூர்வீக வீடும் மனைவி பெயரிலான சொத்தாக குறிப்பிடப்பட்டிருந்தது.
அதே தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த சுரேஷ்குமார் தனது சொத்து மதிப்பு 20 கோடிக்கு மேல் என்று பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டு இருந்தார். அமமுக சார்பில் சென்னையைச் சேர்ந்த ரஜினிகாந்த் என்பவரும், நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்த்தி என்பவரும் போட்டியிட்டார்கள்.
இவர்களுடன் போட்டியிடும் மாரிமுத்து, மக்களின் குரலாக ஒலிப்பதற்காகவும், மக்களுக்கான திட்டங்களை பெற்றுத்தரவும் சட்டமன்றம் செல்ல களத்தில் நிற்பதாகவும், போராட்டங்களே வாழ்க்கையான பின், தேர்தலும் ஒரு போராட்ட களம் தான் என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
