400 பேருடன் பயணித்த விமானம்.. நைட்ல அதிகாரிகளுக்கு வந்த ஒரு ஈமெயில்.. கொஞ்ச நேரத்துல மொத்த ஏர்போர்ட்டையும் பிளாக் பண்ணிட்டாங்க..!
முகப்பு > செய்திகள் > இந்தியாரஷ்யாவில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் வெடிகுண்டுகள் இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, மொத்த விமான நிலையமும் பரபரப்புடன் காணப்படுகிறது.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோ-வில் இருந்து டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு கிளம்பியிருக்கிறது ரஷ்யாவை சேர்ந்த Aeroflot நிறுவனத்தின் போயிங் 777 விமானம். நேற்று கிளம்பிய இந்த விமானம் இன்று அதிகாலை டெல்லியில் தரையிறங்க இருந்தது. இதனிடையே டெல்லி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு ஒரு மின்னஞ்சல் வந்திருக்கிறது. அதில் ரஷ்யாவில் இருந்து டெல்லி வரும் விமானத்தில் வெடிகுண்டுகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்ததாக தெரிகிறது.
இதனையடுத்து, விமான நிலையத்தில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் இதுகுறித்த பணியில் இறங்கினர். இதனிடையே ரஷ்யாவில் இருந்து கிளம்பிய அந்த விமானம் டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் அதிகாலை 2.48 மணிக்கு பத்திரமாக தரையிறங்கியுள்ளது.
இந்த விமானத்தில் 386 பயணிகள் மற்றும் 14 விமான பணியாளர்கள் இருந்திருக்கின்றனர். விமானம் தரையிறங்கிய உடனேயே பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்களை வெளியேற்றினர். விமானத்தில் வந்தவர்கள் பத்திரமான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட பிறகு, விமானத்தை பரிசோதனைக்கு உட்படுத்தியிருக்கின்றனர் அதிகாரிகள். அதில், சந்தேகத்திற்கிடமாக பொருட்கள் ஏதும் கிடைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இதுகுறித்து பேசிய விமான நிலைய அதிகாரி,"நேற்று இரவு 11 மணிக்கு கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் ரஷ்யாவில் இருந்து டெல்லி வரும் விமானத்தில் வெடுகுண்டுகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டன. அதன்படி, அதிகாலை 2.48 மணிக்கு விமானம் பத்திரமாக தரையிறங்கியது. பயணிகள் கீழே இறக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதன்பிறகு விமானம் சோதனையிடப்பட்டது. ஆனால், அதில் சந்தேகப்படும்படி ஏதும் கிடைக்கவில்லை. இருப்பினும் பாதுகாப்பு காரணங்களுக்காக விமானத்தை தனிமைப்படுத்தியுள்ளோம்" என்றார். இதனால் விமான நிலையமே பரபரப்புடன் காணப்படுகிறது.