புறப்பட தயாரான விமானம்.. பயணி ஒருவருக்கு தோழியிடம் இருந்து வந்த 'மெசேஜ்'.. பதறிய சக பயணி.. "உடனே FLIGHT'அ நிப்பாட்டிட்டாங்க.."
முகப்பு > செய்திகள் > இந்தியாமங்களூரு பகுதியில் இருந்து மும்பையை நோக்கி ஒரு விமானம் செல்ல தயாராகி இருந்த நிலையில், ஒரு பயணிக்கு வந்த மெசேஜ் காரணமாக, விமானம் நிறுத்தப்பட்ட சம்பவம், கடும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, நேற்று காலை சுமார் 11 மணியளவில் விமானம் ஒன்று மும்பையை நோக்கி புறப்பட தயாராகி இருந்தது.
அந்த சமயத்தில் திடீரென விமானம் நிறுத்தப்பட்ட நிலையில், அதில் இருந்த பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, அவர்களின் உடைமைகள் மற்றும் விமானம் அனைத்தையும் முழுமையாக அதிகாரிகள் சோதனையிட தொடங்கி உள்ளனர்.
இப்படி திடீரென விமானம், அதிலிருந்த பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டதற்கு முழுக்க முழுக்க ஒரே காரணம் தான். அந்த விமானத்தில் பயணம் மேற்கொண்ட ஆண் பயணி ஒருவருக்கு வந்த மெசேஜ் தான் அனைத்திற்கும் காரணமாக அமைந்துள்ளது. அவர் தனது நெருங்கிய தோழியுடன் மெசேஜ் செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் பயணியின் நெருங்கிய தோழியும், நீ ஒரு வெடிகுண்டு என்பதை குறிப்பிட்டு, "U r da bomber" என மெசேஜ் ஒன்றை செய்துள்ளார்.
இதனை அருகே இருந்த பயணி ஒருவர் கண்டதும், ஒரு நிமிடம் பதறிப் போய் உடனடியாக அதிகாரிகளுக்கு புகார் ஒன்றை அளித்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கருதி, அதிகாரிகள் விமானத்திலும், பயணிகளையும் சோதனை செய்து பார்த்துள்ளனர். அப்போது, வெடிகுண்டு அல்லது ஆபத்தினை விளைவிக்கக் கூடிய பொருள் எதுவும் இல்லை என்பதும் உறுதியானது. தொடர்ந்து, அப்படி மெசேஜ் அனுப்பிய பயணியிடம் இது பற்றி கேட்ட போது, விளையாட்டாக தனது தோழி மெசேஜ் அனுப்பியதாக கூறி உள்ளார்.
அவரிடம் முறையாக விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், சுமார் ஆறு மணி நேரம் தாமதமாக அந்த விமானம் அங்கிருந்து கிளம்பிச் சென்றது. மேலும் வெடிகுண்டு என குறிப்பிட்டு மெசேஜில் உரையாடிய பயணி மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
விமானத்தில் இருந்த பயணிக்கு வேடிக்கையாக 'வெடிகுண்டு' என குறிப்பிட்டு மெசேஜ் வரவே, அதன் காரணமாக ஆறு மணி நேரம் விமானம் தாமதமான விஷயம், அப்பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.