கிளம்புன இடத்துக்கே திரும்புன விமானம்.. தரையிறங்குன அப்பறம் தான் விபரமே தெரியவந்திருக்கு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லியில் இருந்து கிளம்பிய தனியார் விமானம் ஒன்று மீண்டும் டெல்லியிலேயே தரையிறங்கியிருக்கிறது. இதனால் விமான நிலையமே பரபரப்புடன் காணப்பட்டது.

குழப்பம்
டெல்லியில் அமைந்துள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று காலை கிளம்பிய இந்தியாவை சேர்ந்த தனியார் விமானம் ஒன்று நாசிக் சென்றுகொண்டிருந்தது. இருப்பினும், அந்த விமானம் மீண்டும் டெல்லிக்கே சென்றதால் பயணிகள் குழப்பம் அடைந்திருக்கின்றனர். விமானத்தின் ஆட்டோ பைலட் வசதியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த பிழை நடந்திருப்பது பின்னர் தான் பயணிகளுக்கு தெரியவந்திருக்கிறது.
இதனையடுத்து அந்த விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்ட பயணிகள் வேறு விமானம் மூலமாக நாசிக் நோக்கிய பயணத்தை துவங்கினர். இந்நிலையில் இதுகுறித்து பேசிய அதிகாரி ஒருவர்,"இன்று காலை டெல்லி விமான நிலையத்தில் இருந்து நாசிக்கிற்கு இயக்கப்பட்ட போயிங் 737 விமானம் மீண்டும் டெல்லியிலேயே தரையிறங்கப்பட்டது. விமானத்தின் ஆட்டோ பைலட் வசதியில் ஏற்பட்ட கோளாறே இதற்கு காரணம். விமானம் பத்திரமாக டெல்லியில் தரையிறங்கியது" என்றார்.
நோட்டீஸ்
காலை 6.53 மணிக்கு கிளம்பிய இந்த விமானம் ஒருமணி நேரம் கழித்து மீண்டும் புறப்பட்ட இடத்திலேயே தரையிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஜூலை மாதம் இந்திய சிவில் விமானப் போக்குவரத்து தலைமை இயக்குனரகம் சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்துக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியிருந்தது. விமானங்களில் ஏற்படும் தொடர் கோளாறுகள் காரணமாக விளக்கம் கோரி இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக தெரிகிறது.
அந்த நோட்டீஸில் பாதுகாப்பான, திறமையான மற்றும் நம்பகமான விமான சேவைகளை அளிக்க தவறிவிட்டதாகவும், நிறுவனம் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதை விளக்குமாறும் விமான நிறுவனத்திடம் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பு குறிப்பிட்டிருந்தது. மேலும், பயண சேவைகளிலும் DGCA கட்டுப்பாடு விதித்திருந்தது. இந்த சூழ்நிலையில், இன்று டெல்லியில் கிளம்பிய இந்த விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் மீண்டும் டெல்லியிலேயே தரையிறங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
