ரூ 6 கோடி மதிப்புள்ள பொருட்களை களவாடிய கும்பல்.. கடைசில 100 ரூபாய்க்கு ஆசைப்பட்டு போலீசில் சிக்கிய வினோதம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லியில் 6 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை திருடிய கும்பலை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.

பார்சல்
டெல்லியில் பஹார்கஞ்ச் பகுதியை சேர்ந்த இருவரை கடந்த புதன்கிழமை போலீஸ் உடையில் இருந்த நபர் ஒருவர் வழிமறித்திருக்கிறார். டெலிவரி நிறுவனத்தில் பணிபுரியும் அந்த இருவரும் காவல்துறை அதிகாரி என நினைத்து அவரது கேள்விகளுக்கு பதில் கூறியிருக்கின்றனர். அப்போது இருவரிடத்திலும் பார்சல் இருந்திருக்கிறது. அப்போது, பார்சலை பிரிக்கும்படியும் உள்ளே இருப்பதை பார்க்க வேண்டும் என போலீஸ் உடையணிந்த நபர் கூறியிருக்கிறார். இதனால் இருவரும் குழப்பமடைந்த நிலையில் அப்போது அங்குவந்த நபர் ஒருவர் பார்சலை கொடுக்கவில்லை என்றால் கொன்றுவிடுவோம் என மிரட்டியிருக்கிறார். இதனால் இருவரும் அச்சமடைந்த நிலையில் அவர்களது கண்ணில் மிளகாய்ப்பொடியை தூவிவிட்டு அங்கிருந்த பார்சலை எடுத்துக்கொண்டு ஓடியிருக்கிறார்கள் இருவரும்.
டாக்சி ஓட்டுநர்
இதனையடுத்து டெலிவரி நிறுவனத்தில் பணிபுரியும் இருவரும் இதுகுறித்து காவல்துறையில் புகார் கொடுத்திருக்கின்றனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ய துவங்கினர். சுமார் 7 நாட்களுக்கு இந்த பணி நீடித்திருக்கிறது. அப்போது சந்தேகத்திற்கிடமாக 4 பேர் அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்ததை போலீசார் கண்டறிந்தனர். மேலும், இந்த நான்கு பேரில் ஒருவர் அருகில் இருந்த டாக்சி டிரைவரிடம் பேசுவதை அதிகாரிகள் கண்டுபிடித்திருக்கின்றனர்.
Credit : Delhi Police
100 ரூபாய்
இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த டாக்சி டிரைவரிடம் 100 ரூபாய் பெற்றுக்கொண்டு அவருக்கு பேடிஎம் மூலமாக அந்த இளைஞர் பணத்தை டிரான்ஸ்பர் செய்தது தெரியவந்திருக்கிறது. டீ குடிப்பதற்காக இந்த தொகையை அவர்கள் பெற்றிருக்கிறார்கள். இதன்மூலம், 6 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களை திருடிச் சென்ற கும்பலை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். அவர்களிடம் இருந்து 6,270 கிராம் தங்கம், 3 கிலோ வெள்ளி மற்றும் வைர நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.
கோடி கணக்கில் மதிப்புடைய பொருட்களை திருடிய கும்பல் இறுதியில் 100 ரூபாய் பணப்பரிவர்த்தனை மூலமாக காவல் துறையில் சிக்கிய சம்பவம் உள்ளூர் மக்களை வியப்படைய செய்திருக்கிறது.

மற்ற செய்திகள்
