'காரின் விலை 39 லட்சம்'... 'ஆனா பேன்சி நம்பருக்காக இவ்வளவு தொகையா?'... 'ஷாக் ஆன ஆர்டிஓ'... ஆச்சரியப்படவைத்த இளைஞர்!
முகப்பு > செய்திகள் > இந்தியாதான் முதல் முதலாக வாங்கிய காருக்கு இளைஞர் ஒருவர் 34 லட்ச ரூபாய் செலவழித்துள்ள சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் ஆஷிக் படேல். 28 வயதான இவர் சமீபத்தில் புத்தம் புதிய டொயோட்டா பார்ச்சூனர் காரை வாங்கியுள்ளார். இதற்கு அகமதாபாத் மண்டல போக்குவரத்துத் துறை அலுவலகத்தில் (ஆர்டிஓ) பதிவு செய்து காருக்கான எண் பெற வேண்டும். ஆர்டிஓ அலுவலகத்தில் ‘பேன்சி நம்பர்' வேண்டுமென்றால் அதற்காக ஏலம் நடைபெறும். அதன்மூலம் நாம் விரும்பும் பேன்சி நம்பரைப் பெற்றுக் கொள்ளலாம்.
இதையடுத்து ஆர்டிஓ அலுவலகத்தில் பேன்சி நம்பருக்கான ஏலம் ஆன்லைனில் நடைபெற்றது. இளைஞர் ஆஷிக் மிகப்பெரிய ஜேம்ஸ் பாண்ட் ரசிகர். இதனால் 007 என்ற எண்ணைப் பெற்று விட வேண்டும் என ஆஷிக் உறுதியாக இருந்தார். இதனைத்தொடர்ந்து அதற்கான ஏலம் தொடங்கிய நிலையில், 007 என்ற எண்ணுக்கான குறைந்தபட்ச ஏலத்தொகை ரூ.25 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த எண்ணைப் பெறுவதற்கு ஆஷிக்கும் இன்னொருவரும் ஆன்லைனில் பிடிவாதமாக இருந்தனர்.
இதனால் நேரம் சென்று கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் ரூ.25 லட்சம் வரை ஏலத் தொகை சென்றுவிட்டது. கடைசியில் நள்ளிரவு 11.53 மணிக்கு ரூ.34 லட்சத்துக்கு ஆஷிக் கேட்டார். ஏல நேரம் முடிவடையும் தருணத்தில் இருந்ததால், அவருக்கே 007 எண் ஒதுக்கப்பட்டது. இதுகுறித்து ஆஷிக் படேல் கூறும்போது, ''இது என்னுடைய முதல் கார். அதற்கு நான் விரும்பிய 007 எண்ணைப் பெற்று விட்டேன். இது நம்பிக்கையைப் பொறுத்தது. இந்த எண் எனக்கு ராசியானது'' என ஆஷிக் கூறியுள்ளார்.
இதற்கிடையே 007 எண்ணிற்காக ஆஷிக் 34 லட்சம் செலவழித்த நிகழ்வு, ஆர்டிஓ அதிகாரிகளுக்கே பெரும் ஆச்சரியத்தை அளித்தது. அகமதாபாத் ஆர்டிஓ அலுவலக வரலாற்றில் ரூ.34 லட்சத்துக்கு ஒரு எண் ஏலம் எடுக்கப்பட்டது இதுவே முதல் முறை. இதற்குமுன்பு 001 என்ற எண் ரூ.5.56 லட்சம், 0369 ரூ.1.40 லட்சத்துக்கும் ஏலம் எடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.