எம்.பி.யான இன்ஸ்பெக்டர்... முன்னாள் டி.எஸ்.பி.க்கு சல்யூட்... வைரலான புகைப்படம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | May 27, 2019 11:01 AM

எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்ட முன்னாள் இன்ஸ்பெக்டர் ஒருவர், டி.எஸ்.பி. ஒருவருக்கு  சல்யூட் அடிக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Photo of Andhra inspector turned MP saluting former boss goes viral

ஆந்திர மாநிலக் காவல்துறையில் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக இருந்தவர் கொரண்டலா மாதவ். கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ததிபாத்ரி பகுதியில் உள்ள சின்னபோலமாடா கிராமத்தில் விநாயகர் சிலை கரைப்பதில் ஏற்பட்ட தகராறு பெரும் வன்முறையாக வெடித்தது. அப்பகுதியில் மாதவ் போலீஸ் அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். 

அப்போது தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்தரும், அனந்த்பூர் தொகுதியின் எம்.பி.யான ஜே.சி.திவாகர் ரெட்டி, போலீஸாரை அவமதிக்கும் வகையில் பேசியிருந்தார்.  இதனையடுத்து, 'காவல்துறையை அவமதிக்கும் வகையில் ஆளுங்கட்சியினர் யார் பேசினாலும் அவர்கள் நாக்கை துண்டித்துவிடுவேன்' என சர்க்கிள் இன்பெக்டரான மாதவ், திவாகர் ரெட்டிக்கு பதிலடி கொடுத்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

அந்த சம்பவத்துக்குப் பின்னர் போலீஸ் பணியைத் துறந்து தீவிர அரசியலில் களமிறங்கினார் மாதவ். கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பரில், போலீஸ் பணியிலிருந்து அவர் விருப்ப ஓய்வுபெற்றார். அவருக்குத் தேர்தலில் போட்டியிட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் இந்த முறை வாய்ப்பளித்தது. முதலில் அவரது விருப்பப் பணி ஓய்வு முடிவை காவல்துறை ஏற்கவில்லை என்பதால், அவரது வேட்புமனுவையும் தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, மாநில நிர்வாக ஆணையம் தலையிட்டு, மாதவின் ராஜினாமாவை ஏற்கும்படி, ஆந்திர டி.ஜி.பிக்கு உத்தரவிட்டது. இதையடுத்தே அவரது வேட்புமனு ஏற்கப்பட்டது. இதன்பின்னர், ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட மாதவ், சிட்டிங் எம்.பியான தெலுங்கு தேசம் கட்சியின் கிறிஸ்டப்பா நிம்மலாவைவிட 1,40,748 வாக்குகள் அதிகம் பெற்று அமோக வெற்றி பெற்று,  அனந்த்பூர் மாவட்டத்தில் உள்ள ஹிந்த்பூர் தொகுதி எம்.பியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், போலீஸார் சிலர் நின்றிருக்க, டி.எஸ்.பி மஹபூப் பாஷாவுக்கு கொரண்டலா மாதவ், சல்யூட் அடிக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு விளக்கமளித்துள்ள மாதவ், 'வாக்கு எண்ணிக்கையின்போது தனது முன்னாள் உயர் அதிகாரியான பாஷாவைப் பார்த்ததாகவும், அவருக்கு மரியாதை செலுத்தும்விதமாக சல்யூட் அடித்ததாகவும் கூறியிருக்கிறார். தனிப்பட்ட முறையில் அவரது குணநலன்கள் என்னை ஈர்ப்பவை. பரஸ்பரம் மரியாதை செய்யவே சல்யூட் அடித்தேன்' என்று தெரிவித்துள்ளார்.

Tags : #LOKSABHAELECTIONRESULTS2019 #ANDHRAPRADESH #MP