'மாம்பழத்துக்கு மவுசு குறைகிறதா?'... '7 இடங்களிலும் தோல்வி'!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Sangeetha | May 24, 2019 01:16 PM
மக்களவைத் தேர்தலில் ஏழு தொகுதிகளில் போட்டியிட்ட பா.ம.க., அனைத்திலும் தோல்வி அடைந்துள்ளது தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவைத் தேர்தலில் பா.ம.க., அ.தி.மு.க.வோடு கூட்டணி சேர்ந்து ஏழு இடங்களில் போட்டியிட்டது. இதில் முக்கிய தொகுதியாக பார்க்கப்பட்டது அன்புமணி போட்டியிட்ட தருமபுரிதான். அன்புமணி வெற்றிக்காக பல கூட்டணி கட்சி தலைவர்களும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டனர். தி.மு.க சார்பில் செந்தில்குமார் போட்டியிட்டார்.
தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக போய் கொண்டிருந்தநிலையில் ஆரம்பத்தில் முன்னிலை வகித்த அன்புமணி, பின்னர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட செந்தில் குமாரை விட, சுமார் 66, 210 வாக்குகள் குறைவாகப் பெற்று தோல்வி அடைந்தார். அந்த கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமான அன்புமணி போராடி தோல்வியடைந்தது தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 2009 மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. உடனும், 2011 சட்டசபை தேர்தலில், தி.மு.க. உடனும் கூட்டணி வைத்து பா.ம.க. தோல்வியடைந்தது. இத்தோல்விகளுக்குப் பின், 'தமிழகத்தில், திராவிட கட்சிகளுடன், இனி கூட்டணி இல்லை. பா.ம.க., தனித்தே போட்டியிடும்' என அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். இதை மீறி 2014-ல் மக்களவைத் தேர்தலில், பா.ம.க. - பா.ஜ.க. இடம்பெற்ற கூட்டணியில், ஏழு தொகுதிகளில் போட்டியிட்டது.
இதில், தருமபுரி தொகுதியில் அன்புமணி மட்டும் வெற்றி பெற்றார். பிற தொகுதிகளில் பா.ம.க. வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக ஆளும் கட்சியான அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வை பா.ம.க. கடுமையாக விமர்சனம் செய்து வந்தது. ஆனால் மக்களவைத் தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. ஐக்கியமானதே தோல்விக்கு காரணமாக கூறப்படுகிறது.
தனித்து போட்டியிடுவோம் என அறிவித்து கூட்டணி அமைத்ததை, மக்களும் பா.ம.க. அடிமட்ட தொண்டர்களும் ஏற்கவில்லை என்பதை, இத்தேர்தல் முடிவு, தலைமைக்கு தெளிவுபடுத்தியுள்ளதாகவே தெரிகிறது. தேர்தலில் பா.ம.க. அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்துள்ளதால், அக்கட்சிக்கு கூட்டணி ஒப்பந்தத்தின்படி, அ.தி.மு.க. தரப்பில் ராஜ்யசபா எம்.பி. பதவி தரப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது