‘அப்பா என்ன மன்னிச்சிருங்க’!.. ‘எல்லோரும் என்ன அப்படி சொல்லி கிண்டல் பண்றாங்க’.. விபரீத முடிவெடுத்த 16 வயது சிறுவன்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாதிருநங்கை என நண்பர்கள் கிண்டல் செய்ததால், 16 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுவன், தனது தந்தை மற்றும் சகோதரருடன் பரேய்லி பகுதியில் உள்ள சுபாஷ் நகரில் வசித்து வந்தார். அவர் பெண் போன்ற தோற்றத்தில் இருப்பதாக கூறி நண்பர்கள் உட்பட பலரும் அவரை ‘திருநங்கை’ என கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. அதனால் கடந்த சில நாட்களாக சிறுவன் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளான்.
இந்நிலையில் அந்த சிறுவன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது அறையில் இருந்து கடிதம் ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.
அதில், ‘என்னால் நல்ல மகனாக இருக்க முடியாததற்கு மன்னித்து விடுங்க அப்பா. என்னுடைய முகமும், செயல்களும் பெண் போல் இருப்பதாக கூறி பலரும் கிண்டல் செய்கிறார்கள். அதனால் நான் திருநங்கை தானோ என்ற எண்ணம் எனது மனதிலும் அடிக்கடி தோன்றுகிறது. என்னால் உங்கள் வாழ்க்கையும் இருளில் கிடப்பதை நான் விரும்பவில்லை. அதனால் தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளேன். அடுத்த பிறவியில் நான் பெண்ணாக பிறக்க வேண்டும் என ஆசிர்வதியுங்கள். நமது குடும்பத்தில் யாருக்காவது பெண் குழந்தை பிறந்தால் நான் மீண்டும் பிறந்திருப்பதாக நம்புங்கள்’ என குறிப்பிட்டிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஒருவரை உடல் தோற்றத்தை வைத்து விமர்சனம் செய்யும் போது அவர்கள் மனதளவில் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்றும் சமுதாயத்தை வெறுக்க தொடங்குவார்கள் என்றும் மனநல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வித்தியாசமான உடல் தோற்றம் கொண்டவர்களை நாம் அனைவரும் சாதாரணமாகவும், மரியாதையுடனும் நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். உடல் தோற்றத்தை வைத்து திருநங்கை என நண்பர்கள் கிண்டல் செய்ததால் சிறுவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.