'கொஞ்சம் கொஞ்சமா திருடுனா எப்படி கண்டுபிடிக்க முடியும்!?'.. பள்ளிக்கூடம்.. தேவாலயம்... மெக்கானிக் ஷாப்... மாணவன் நீட் ஸ்கெட்ச்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தொடர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர் மற்றும் அரசுப் பள்ளி மாணவன் ஆகியோரை காவல்துறை கைது செய்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கூனிமேடு ஊராட்சியில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், கணினி அறையை உடைத்து அதிலிருந்த கணினி, நாற்காலிகள், குளிர்சாதனப் பெட்டிகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றனர். இதனையடுத்து திருட்டுச் சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
இந்தக் கொள்ளைச் சம்பவம் நடந்த மறு நாள், கூனிமேட்டில் உள்ள தேவாலயம் ஒன்றின் பூட்டை உடைத்து அங்கிருந்த பல ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இந்தக் கொள்ளை சம்பவம் குறித்தும் தேவாலயம் நிர்வாகம் சார்பில் மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து கூனிமேடு கிராமத்தில் உள்ள பூட்டிய வீடு மற்றும் அதே பகுதியில் இருக்கும் வாகன பழுது பார்க்கும் கடையை உடைத்து, அங்கிருந்த பல லட்சம் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இந்தத் தொடர் கொள்ளை சம்பவங்கள் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், கொள்ளையர்களைக் கண்டுபிடிக்க விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.
இந்த விசாரணையில் கூனிமேடு இடுகாடு அருகே உள்ள தென்னந்தோப்பில் அமைந்திருக்கும் கீற்றுக் கொட்டகைக்குப் பல மர்ம நபர்கள் அடிக்கடி வந்து செல்வதாக காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின் படி தனிப்படை காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை நடத்தினர். அப்போது கூனிமேடு பகுதியில் திருடுபோன அனைத்து பொருட்களும் அங்கு இருந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தொடர் கொள்ளைச் சம்பங்களில் ஈடுபட்டது அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் மாரிமுத்து (26) மற்றும் கோயில் பூசாரியின் மகன், கூனிமேடு அரசு மேல் நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் என்பதும் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து, பள்ளி மாணவன் உட்பட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். பொருட்கள் மற்றும் கொள்ளை சம்பவத்திற்குப் பயன்படுத்திய வாகனம் உள்பட ரூ.6 லட்சம் மதிப்பிலான பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

மற்ற செய்திகள்
