'தடுப்பூசி' கண்டுபுடிக்குற வரைக்கும்... பள்ளிக்கூடம் 'தெறக்க' மாட்டோம்... அதிரடியாக அறிவித்த நாடு!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை பள்ளிகள் திறக்கப்படாது என அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி, மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தி உள்ளது. வறுமை, வேலையின்மை, உயிரிழப்புகள், பொருளாதார சீர்குலைவு என பல்வேறு பிடிகளில் உலக நாடுகள் சிக்கித்தவித்து வருகின்றன.
குறிப்பாக மாணவர்களின் கல்வி இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வதாக முதல்வர் எடப்பாடி இன்று அறிவித்துள்ளார். இதேபோல இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரையில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படாது என பிலிப்பைன்ஸ் நாடு அறிவித்துள்ளது. இது தொடர்பாக பிலிப்பைன்ஸ் கல்வித்துறை செயலர் லியோனர் பிரியோனஸ், ''கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை பள்ளிகள் திறப்பு இருக்காது. தனிமனித இடைவெளியுடன் குழந்தைகளைப் பள்ளியில் உட்கார வைக்க உடன்பாடு இல்லை. குழந்தைகள் தங்கள் நண்பர்களை நெருங்கும்போது தொற்று நிச்சயம் பரவும்.
ஆகஸ்ட் இறுதி வாரம் முதல் ஆன்லைன் மற்றும் தொலைக்காட்சி மூலமாக கற்பித்தல் வகுப்புகள் தொடங்கும். எனினும் வறுமையான மற்றும் இணைய இணைப்பு இல்லாத தொலைதூர சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளின் கல்வி குறித்து கவலை எழுகிறது. இவர்களுக்கான மாற்று ஏற்பாடுகள் குறித்து யோசித்து வருகிறோம்'' என்று தெரிவித்துள்ளார். பிலிப்பைன்ஸில் கொரோனாவால் 22,474 பேர் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். 1,011 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

மற்ற செய்திகள்
